Last Updated : 10 Jul, 2019 06:59 PM

 

Published : 10 Jul 2019 06:59 PM
Last Updated : 10 Jul 2019 06:59 PM

எமர்ஜென்சியைக் காட்டிலும் மோசமாக இருக்கிறது: தேவேகவுடா வேதனை

எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற அமைச்சர் சிவக்குமாருக்கு அனுமதி மறுத்ததைப் பார்க்கும் போது, சூழல் அவசரநிலையைக் காட்டிலும் மோசமாக இருக்கிறது, எனது 60 ஆண்டுகால பொதுவாழ்ககையில் இதுபோன்று பார்த்தது இல்லை என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவே கவுடா வேதனை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தனர்.

 ஆனால், இந்த ராஜினாமா கடித்ததை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. 8 எம்எல்ஏக்கள் கடிதம் முறையின்றி இருப்பதால் தன்னால்கடித்ததை ஏற்க முடியாது, 5 எம்எல்ஏக்கள் தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சமாதானப் பேச்சு நடத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக அமைச்சருமான டி.கே. சிவக்குமார் இன்று மும்பை சென்றார். மும்பையில் தனியார் ஒட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க சிவக்குமார் முயன்றபோது அவர்களை போலீஸார் ஓட்டலுக்குள் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்த விஷயம் குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா நிருபர்களுக்கு இன்று பெங்களூருவில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்களைச் சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இப்படிப்படிப்பட்ட சூழலை நான் என்னுடைய 60 ஆண்டுகால  பொதுவாழ்க்கையில் கூட பார்த்தது இல்லை.

இப்போது இருக்கும் சூழல் அவசரநிலையைக் காட்டிலும் மோசமாக இருக்கிறது. நாட்டில் ஜனநாயகத்தைக் காக்கும்பொருட்டு, அனைத்து கட்சிகளும் வேற்றுமைகளை மறந்து ஒன்றாக, ஒற்றுமையாக சேர வேண்டிய நேரமிது " என வலியுறுத்தினார்.

இதற்கிடையே காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை நோக்கி பாஜகவைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்றனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆளுநர் மாளிகைநோக்கி சென்றனர். அவர்களை போலீஸார் மறுத்து கைது செய்து அழைத்துச்சென்றனர்.

அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், " மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ், ஜேடிஎஸ் தொண்டர்களும் அமைதியாக இருக்காதீர்கள். பாஜக தலைவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கு போராட்டம் நடத்துங்கள்.

மும்பையில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் பணத்துக்காக சென்றுள்ளார்கள், மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. அவர்கள் விலைபோய் விட்டார்கள். பாஜக வலையில் சிக்கி இருக்கும் அந்த எம்எம்ஏக்கள் அனைவரும் அங்கிருந்து வந்து ராஜினாமா கடித்ததை வாபஸ் பெற வேண்டும். மக்களின் தீர்ப்புகளுக்கு மதிப்பளியுங்கள், இல்லாவிட்டால் மக்கள் மன்னிக்கமாட்டார்கள் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x