Last Updated : 20 Aug, 2017 12:46 PM

 

Published : 20 Aug 2017 12:46 PM
Last Updated : 20 Aug 2017 12:46 PM

நிக்காஹ் ஹலாலாவுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பு இல்லை: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் விளக்கம்

‘நிக்காஹ் ஹலாலா’ எனப்படும் திருமண முறைக்கு இஸ்லாத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மீண்டும் அறிவித்துள்ளது. இந்த வாரியத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளரான மவுலானா முகம்மது வலி ரஹ்மானி இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மணமான முஸ்லிம் பெண்களிடம் அவர்களுடைய கணவன்மார்கள் நேரில் வராமல் மூன்று முறை தலாக் கூறி செய்யும் உடனடி விவாகரத்து மற்றும் நிக்காஹ் ஹலாலா ஆகிய முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதில், நிக்காஹ் ஹலாலா என்பது, விவாகரத்து செய்த தம்பதிகள் மீண்டும் மணம்புரிந்து சேர்ந்து வாழும் முறையாகும். இதில் பெண் மட்டும் வேறு ஒருவரை மணம் புரிந்து அவரை உடனடியாக விவாகரத்து செய்து விட்ட பிறகு தான் தனது கணவரை மறுமணம் செய்ய முடியும். பெண்களுக்கு மிகவும் பாதகமானதாகக் கருதப்படும் இந்த முறைகளுக்கு பல்வேறு பிரிவு முஸ்லிம் பெண்கள் இடையே பல ஆண்டுகளாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இத்துடன் நவீன காலத்திற்கு ஏற்றபடி, முஸ்லிம் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளிடம் சமூக இணையதளங்கள், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் போன்றவை மூலமாகவும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிக அதிகமாகக் காயப்படுவதுடன் அவர்களின் திருமண நிலை பாதுகாப்பு அற்றதாகவும் ஆகி வருகிறது. இதனால் ஒருதலைப்பட்சமான அந்த முறைக்கு தடை விதிக்க வேண்டும் என பாரதிய முஸ்லிம் பெண்கள் போராட்டக்குழு என்ற அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இவ்விரண்டுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மவுலானா முகம்மது வலி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பல காலமாக நிக்காஹ் ஹலாலா என்பது ஊடகங்களின் விவாதத் தலைப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதுபோன்ற நிபந்தனை திருமணங்களுக்கு இஸ்லாத்துடன் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். தனிச்சட்ட வாரியம் எடுத்துள்ள இந்த முடிவையும் ஊடகங்கள் இந்த தலைப்பின் விவாதங்களில் எடுத்துச் சொல்ல வேண்டும். இதுபோல் பெயர் கெடுக்கும் வகையிலான திருமணங்கள், இஸ்லாத்தில் கடும் குற்றம் என்பதை மறுபடியும் கூறிக் கொள்கிறோம். இதுபோன்ற செயலை இறைத்தூதரான முகம்மது நபி கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தவகையான திருமணங்களை செய்து கொள்ளும் ஆண், பெண் இருவருமே குற்றவாளிகள் ஆவர். இதன் மீதான செய்திகளை, ஷரீயத் சட்டங்களை தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இதுபோன்ற செய்திகளை பொதுமக்கள் முன்பாக வெளியிடுவதற்கு முன் பொறுப்பான ஊடகங்கள் அதன் மீது விளக்கம் பெறுவது அவசியம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, முத்தலாக் மற்றும் ஹலாலா முறைகளை தடை செய்யக் கோரும் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளன. இதில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ஹலாலா என்பது இஸ்லாத்திற்கு எதிரானது எனவும், முத்தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்வதும் இஸ்லாத்தில் வெறுக்கக் கூடிய செயல் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x