Last Updated : 27 Jul, 2017 10:25 AM

 

Published : 27 Jul 2017 10:25 AM
Last Updated : 27 Jul 2017 10:25 AM

தனி நபர் சுதந்திரம் அடிப்படை உரிமையா?- கர்நாடகம், மேற்கு வங்கம் சார்பிலும் மனு

தனி நபர் சுதந்திரம் அடிப்படை உரிமையா என்பது குறித்த வழக்கில் கர்நாடகம், மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் சார்பிலும் மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தனி நபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் கீழ் வருகிறதா என்பது குறித்து முடிவு செய்வதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே இரண்டு நாட்கள் இப்பிரச்சினை குறித்து விவாதம் நடந்துள்ள நிலையில், மூன்றாம் நாள் விசாரணை நேற்று நடந்தது.

இந்த வழக்கில் கர்நாடகம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி சார்பிலும் மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மாநிலங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது கூறியதாவது:

தனிநபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அல்ல என்று எம்.பி.சர்மா மற்றும் கரக்சிங் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த தீர்ப்புகள் 1954 மற்றும் 1962-ல் வழங்கப்பட்டவை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில் அளிக்கப்பட்ட அந்த தீர்ப்பு இன்றைய காலகட்டத்துக்கு பொருந்தாது. அன்றைக்கு ஒருவர் வீட்டில் நுழைந்துதான் அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது பல மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டே அந்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் சட்டத்தை அணுக வேண்டும். பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையின் கீழ் தனிநபர் சுதந்திரம் அடங்கியுள்ளது. அது அடிப்படை உரிமை என்றாலும், முழுமையான உரிமை அல்ல. நியாயமான சட்ட நடைமுறைகளின் உதவியுடன் அரசு நினைத்தால், அந்த உரிமையில் தலையிட முடியும். குற்ற வழக்குகள், தேச பாதுகாப்பு, ஜனநாயகத்துக்கு தேவை என்று கருதும் நேரங்களில் சட்ட அங்கீகாரத்துடன் அரசு தலையிட முடியும். அரசுக்கும் தனி நபருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம், அரசு அல்லாதோருக்கும் தனி நபருக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்றம் என்ற அடிப்படையில் தனிநபர் சுதந்திரத்தைப் பார்க்க வேண்டும். தகவல்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் மீறப்பட்டால், அடுத்தகட்டமாக சட்டப்பூர்வ பரிகாரம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அரசின் நிலையில் மாற்றம்

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும்போது, ‘‘பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையில்தான் தனிநபர் சுதந்திரம் வருகிறது. ஆனால், இதன்கீழ் வரும் பல்வேறு உரிமைகளில் தனிநபர் சுதந்திரமும் ஒன்று. அதற்கு அடிப்படை உரிமை என்ற அந்தஸ்து வழங்க முடியாது. சாதாரண சட்ட உரிமையாக மட்டுமே பார்க்க முடியும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ‘‘அப்படி என்றால், தனிநபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமைதான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார். நீதிபதிகள் முன்பாக அட்டர்னி ஜெனரல் ஒப்புக் கொண்டார். இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x