Last Updated : 22 Sep, 2016 07:15 AM

 

Published : 22 Sep 2016 07:15 AM
Last Updated : 22 Sep 2016 07:15 AM

ராணுவ முகாம் மீதான தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆதாரம் குறித்து பாக். தூதரிடம் விளக்கம்

யூரி ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதல் சம்பவத் தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் விவரத்தை பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டுக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அவற்றுக்கு ஆதரவளிப் பதை நிறுத்தும்படியும் பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்துக்கு சம்மன் அனுப்பி வரவழைத்தார். அவரிடம், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள்தான் யூரி தாக்குதலுக்குக் காரணம் என்பதைத் தெரிவித்தார்.

தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் கருவிகளின் தரவுகள் மூலம், அவர்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருந்து புறப்பட்ட இடம் மற்றும் நேரம் தெரியவந்துள்ளது. அதுதொடர்பான விவரங்க ளையும், தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகள், வரை படங்கள், இதர வழிகாட்டு உபகரணங்களில் பாகிஸ்தான் குறியிடப்பட்டிருப்பது குறித்தும் விவரித்தார். இவை இத்தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகிறது என தூதரிடம் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

“யூரி மற்றும் பூஞ்ச் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தான் விசாரணை நடத்த விரும்பினால், தாக்குதலின்போது கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் கைரேகை பதிவுகள், டிஎன்ஏ மாதிரிகளை அளிக்க இந்தியா தயாராக உள்ளது” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேலும், ‘இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளை எங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்’ என 2004-ல் பாகிஸ்தான் அரசு உறுதி அளித்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசிடமிருந்து இந்தியா பதிலை எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x