Last Updated : 21 Feb, 2017 09:48 AM

 

Published : 21 Feb 2017 09:48 AM
Last Updated : 21 Feb 2017 09:48 AM

புந்தேல்கண்ட் பகுதியில் வறட்சி நிலவ சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளே காரணம்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

புந்தேல்கண்ட் பகுதியில் வறட்சி நிலவுவதற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மெத்தனப் போக்குதான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டம் ஓரை நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

புந்தேல்கண்ட் பகுதியில் தாதுப்பொருட்கள் ஏராளமாக உள்ளன. இதை முறையாக பயன்படுத்தினால் மாநிலத்தின் தலைவிதியையே மாற்றி அமைக்க முடியும். ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தப் பகுதியில் எவ்வித வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இப்பகுதியை புறக்கணித்தன. இதனால், இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வேலை வாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் பிழைப்பு தேடி வேறு ஊர்களுக்கு புலம் பெயர்கின்றனர்.

எனவே, இந்தத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய் தால் அடுத்த 5 ஆண்டுகளில் இப்பகுதியை மாற்றிக் காட்டு கிறோம். இங்கு சட்டவிரோதமாக நடைபெறும் சுரங்கப் பணிகளை செயற்கைக்கோள் உதவியுடன் தடுத்து நிறுத்துவோம். மேலும் இப்பகுதியின் வளர்ச்சிக்காக தன்னாட்சி அதிகாரம் பெற்ற புந்தேல்கண்ட் வளர்ச்சி வாரியம் அமைக்கப்படும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பின்தங்கி இருந்தது. தண்ணீர் பற்றாக்குறையால் வேளாண்மை தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டது. இதனால் அங்கிருந்தவர் கள் வெளியேறி வந்தனர்.

ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு பாஜக அரசு சார்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது, நாட்டிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இதுபோல, பாஜக ஆட்சிக்கு வந்தால் புந்தேல்கண்ட் பகுதியும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். வறட்சியைப் போக்குவதற்காக, கென்-பெட்வா ஆறுகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தேன். இதுவரை எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரே குரலில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இவர்களது கவலை எல்லாம் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார் கள் என்பதல்ல. சட்டவிரோதமாக தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை மாற்ற அவகாசம் தர வில்லையே என்ற ஆத்திரத்தில் தான் எதிர்த்தனர். எனவே, ஊழலில் திளைக்கும் கட்சிகளை விடுத்து பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாயமான மோடியின் புன்னகை ராகுல் காந்தி கேலி பேச்சு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 4-வது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் அம்மாநிலத்தில் தீவிரமடைந்துள்ளது. பண்டாவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். தான் உத்தரப் பிரதேசத்தின் வளர்ப்பு மகன் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, இந்த கூட்டத்தின்போது ராகுல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் ஆளும் சமாஜ்வாதியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பதால் பிரதமர் மோடியின் முகத்தில் புன்னகை மறைந்துவிட்டது என்றும் கேலியாக பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x