Published : 18 Sep 2016 11:44 AM
Last Updated : 18 Sep 2016 11:44 AM

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலுக்கு 17 ராணுவ வீரர்கள் பலி: அவசரக்கூட்டத்திற்கு ராஜ்நாத் அழைப்பு

காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யுரி பகுதியில் ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அவசரக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இது குறித்து ஸ்ரீநகரில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் தி இந்து (ஆங்கிலம்) இதழுக்குத் தெரிவிக்கும் போது, “பாரமுல்லா, யுரியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது, என்கவுண்டர் நடவடிக்கையும் தொடர்ந்தது” என்றார். தீவிரவாதிகளை அடக்க ராணுவ சிறப்புப் படைகள் விமானம் மூலம் இறக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 4 மணியளவில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பியாதீன் தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். காயமடைந்தவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ரஷ்யா மற்றும் அமெரிக்கா பயணத்தை ரத்து செய்துள்ளார். இன்று ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்வதாக இருந்தது. பிறகு அமெரிக்காவுக்கு ஒருவார கால பயணம் மேற்கொள்ளவிருந்தார் அவர். செப்டம்பர் 27-ம் தேதி ஹோம்லேண்ட் செக்யூரிட்டி டயலாக் கூட்டத்தில் ராஜ்நாத் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லவிருந்தார்.

ஆனால் உள்துறை அமைச்சக ட்விட்டரில், “ஜம்மு காஷ்மீர் நிலவரத்தைக் கருத்தில் கொண்டும், யுரியில் இன்று நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலையடுத்தும் நான் எனது ரஷ்ய, அமெரிக்கா பயணத்தை ஒத்திவைத்துள்ளேன்.

உள்துறை செயலர் மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளை ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை நெருக்கமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

நிலைமைகள் குறித்து ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மற்றும் முதல்வர் மெஹ்பூபா முப்தியிடமும் பேசியுள்ளார் ராஜ்நாத் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x