Published : 29 Jun 2016 01:02 PM
Last Updated : 29 Jun 2016 01:02 PM

வாட்ஸ்-அப் சேவைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

வாட்ஸ்-அப் சமூக வலைதள சேவைக்கு இந்தியாவில் முழுமையாக தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தள்ளுபடி செய்தது.

குர்காவோனைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் சுதிர் யாதவ் தாக்கல் செய்த பொதுநல மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சுதிர் தனது மனுவை மத்திய அரசிடம் முன்வைக்குமாறும் அறிவுறுத்தியது.

'எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன்' எனக் குறிப்பிடப்படும் வசதியை வாட்ஸ் அப் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியால் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் முன்பு இருந்ததைவிடப் பாதுகாப்பு மிக்கவையாகி இருக்கின்றன.

இதன் மூலம் வாட்ஸ் அப் சேவையில் பகிரப்படும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை இனி மூன்றாம் நபர்களால் அணுக முடியாதவையாகி இருக்கின்றன. இதன் பொருள் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி அனுப்பிவைத்தால் அதற்குரியவர் மட்டும் அதைப் படிக்க முடியும். மற்றவர்களுக்கு அந்தத் தகவல் கலைத்துப் போடப்பட்ட அர்த்தம் கொள்ள முடியாத குறியீடுகளாகவே தோன்றும்.

இந்நிலையில் இந்த புதிய 256-பிட் என்கிர்ப்ஷன் வசதியால் போலீஸ் விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படும். குறிப்பாக தீவிரவாதம் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் தடை ஏற்படும். தேசிய நலன் கருதி சில வாட்ஸ் அப் தகவல்களை டிகிரிப்ஷன் செய்யலாம் என்றால்கூட வாட்ஸ் அப் சேவையில் டிகிரிப்ஷன் கோட் இல்லை.

எனவே, இந்தியாவில் 'வாட்ஸ்-அப்' சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என குர்காவோனைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் சுதிர் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், ‘இது தொழில்நுட்பம் சார்ந்தது என்பதாலும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்தது என்பதாலும், மத்திய தொலைத்தொடர்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை மனுதாரர் அணுகலாம். அங்கு தீர்வு கிடைக்காவிட்டால், நீதிமன்றத்துக்கு வரலாம்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x