Published : 20 Jan 2016 08:45 AM
Last Updated : 20 Jan 2016 08:45 AM

பதான்கோட் தாக்குதல் சம்பவம்: எஸ்.பி.யிடம் உண்மை கண்டறியும் சோதனை

பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில போலீஸ் எஸ்.பி. சல்விந்தர் சிங்கிடம் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 2-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப் படைத் தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.

இதில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பஞ்சாப் போலீஸ் எஸ்.பி. சல்விந்தர் சிங் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

குருதாஸ்பூர் அருகே இரவில் கோயிலுக்குச் சென்று திரும்பியபோது தீவிரவாதிகள் தனது காரை வழிமறித்து கடத்தியதாக சல்விந்தர் சிங் வாக்குமூலம் அளித்தார். அவர் இரவில் கோயிலுக்குச் சென்றது ஏன்? தீவிரவாதிகள் அவரை விடுவித்தது ஏன் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்தன.

மேலும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்தன்று தங்க நகைகளை கடத்திச் செல்வதற்காக சல்விந்தர் சிங்கின் உதவி கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்காகவே அவர் குருதாஸ்பூருக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய அவரது உதவி கோரப்பட்டுள்ளது. அதற்கு அவர் மறுக்கவே, சைரன் பொருத்தப்பட்ட அவரது காரை தீவிரவாதிகள் கடத்தி பதான்கோட் விமான தளத்தை சென்றடைந்ததாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டுவர எஸ்.பி. சல்விந்தர் சிங்கிடம் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதன் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x