Last Updated : 26 Sep, 2018 06:08 PM

 

Published : 26 Sep 2018 06:08 PM
Last Updated : 26 Sep 2018 06:08 PM

‘என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?- ரபேல் ஒப்பந்த உண்மைகளை மோடி மக்களுக்குச் சொல்லட்டும்’: ராபர்ட் வதேரா ஆவேசம்

 

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் அடிப்படை ஆதாரங்கள் அற்று அரசியல்ரீதியாக வேட்டையாடத் துரத்தி வருகிறார்கள் என்று சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர்விமானங்களை கொள்முதல் செய்ய செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. மத்தியஅரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்காமல் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறிய கருத்துக்களும் எரியும் தீயில் நெய் வார்த்தது. இதனால், ரபேல் விவகாரம் உள்நாட்டில் சூடுபிடித்து, காங்கிரஸ், பாஜக இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்று கூறிய பாஜக கட்சி ரிலையன்ஸ் நிறுவனத்தை டஸால்ட் நிறுவனமே தேர்வு செய்தது எனத் தெரிவித்தது.

இந்த விவகாரத்தைத் திசைதிருப்பும் நோக்கில் பாஜக அரசின் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் சோனியா காந்தியின் குடும்பத்தாருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நண்பர் நிறுவனத்துக்கு ரபேல் விமான உதிரிப்பாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பேசுகிறது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் ரபேல் போர்விமான ஒப்பந்தத்தை ராபர்ட் வத்ராவுடன் இணைத்துப் பேசத் தொடங்கினார்கள்.

கடந்த சில நாட்களாக மவுனம் காத்த ராபர்ட் வதேரா தனது பேஸ்புக் பக்கத்தில் பாஜகவினர் தன்மீது கடந்த 4 ஆண்டுகளாக வேண்டுமென்றே செய்துவரும் விஷமப்பிரச்சாரம் குறித்து கடுமையாகச் சாடியுள்ளார், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தன்னை வம்புக்கு இழுக்கிறீர்கள் என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 4 ஆண்டுகளாகவே பாஜகவினர் என்னை நோக்கிச் செய்யும் செயல் வியப்பாக இருக்கிறது. எந்தவிதமான அடிப்படை ஆதாரங்கள் இன்றி அரசியல் நோக்கத்துக்காக என்னை வேட்டையாடப் பார்க்கிறார்கள்.

இப்போது அவர்கள் செய்த மொத்தவிலை கேலிக்கூத்துக்கும்(ரபேல் ஒப்பந்தம்) மோசமான நிர்வாகத்துக்கும் நானே காரணம் என்ற ரீதியில் என்னை இழுக்கிறார்கள்.

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தாலும் நான்தான் காரணம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சமீபத்தில் ஒட்டுமொத்தமும் அம்பலமான ரபேல் ஒப்பந்தம் வரை என்னுடைய பெயரை பாஜகவினர் இழுக்கிறார்கள்.

56 அங்குல மார்பு வைத்துள்ளவர் பொய்மூட்டைகளுக்கு பின்னால் நிற்பதைக் காட்டிலும், துணிச்சலாக வந்து ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். மக்கள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்டு வெறுப்படைந்து இருக்கிறார்கள்.

இவ்வாறு ராபர்ட் வத்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x