Published : 10 Jun 2019 11:35 AM
Last Updated : 10 Jun 2019 11:35 AM

‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ - மத்திய அரசு மீது திரிணமூல் காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

மேற்குவங்க மாநில அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற அரசியல் ரீதியாக சதி நடைபெறுகிறது என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் திரிணமூல் கட்சியின் வாக்குச் சதவீதம் 43 சதவீதமாக அதிகரித்தாலும், வெற்றி பெற்ற இடங்கள் 34-ல் இருந்து 22 ஆக குறைந்துவிட்டது.

கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. அத்துடன் மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் வெறும் 17 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 40.5 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டது.

இதனால் இருகட்சி தொண்டர்களிடையே அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. 24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பாஜக தொண்டர்கள் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்தார். மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்கள் கட்சித் தொண்டர்கள் 3 பேரை பாஜகவினர் கத்தியால் குத்திக் கொன்றதாக மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேற்குவங்க அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பட்டது. அதில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள மேற்குவங்க அரசு, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி கடித்தத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மேற்குவங்க அமைச்சருமான பர்த்தா சட்டர்ஜி கூறியதாவது:

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக திட்டமிட்டே இது நடக்கிறது. மேற்குவங்கத்தில் ஆட்சியை கைபற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முறைகேடாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பான முறையில் பாஜகவை எதிர்ப்பவர்களை நசுக்க மத்திய அரசு முயலுகிறது. ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x