Last Updated : 05 Apr, 2019 12:00 AM

 

Published : 05 Apr 2019 12:00 AM
Last Updated : 05 Apr 2019 12:00 AM

ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் வழக்கு: இடைத்தரகர் மைக்கேலுக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

விவிஐபி ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் இடைத்தரகர் மைக்கேலுக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த 2010 பிப்ரவரியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் இடைத்தரகர்கள் மூலம் இந்தியர்களுக்கு லஞ்சம்கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட மூவரில் பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேலும் ஒருவர். இவரை அமலாக்கத் துறை கடந்த டிசம்பர் 22-ம் தேதி கைது செய்தது. துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மைக்கேலுக்கு எதிராக கடந்த 2016, ஜூனில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில் துணை குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் அமலாக்கத்துறை நேற்று தாக்கல் செய்தது. இது தவிர, குளோபல் சர்வீசஸ் எப்இசட்இ, குளோபல் டிரேடர்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்களில் ஒருவரான டேவிட் சிம்ஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டேவிட் சிம்ஸ், மைக்கேல் ஆகிய இருவரும் இவ்விரு நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆவர்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் மூலம் மைக்கேல் 2.42 கோடி யூரோக்கள் மற்றும் 1.61 கோடி பவுண்டுகள் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில் இந்தப் பணம் மூலம் மைக்கேல் வாங்கிய சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று தெரிவித்தது.

நாளை பரிசீலனைஅமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை ஏப்ரல் 6-ம் தேதி (நாளை) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தெரிவித்தார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,666 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x