Last Updated : 29 Mar, 2019 07:44 AM

 

Published : 29 Mar 2019 07:44 AM
Last Updated : 29 Mar 2019 07:44 AM

கர்நாடக அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை: தேவகவுடா, குமாரசாமி கடும் கண்டனம்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கர்நாடக அமைச்சர் புட்டராஜுவின் வீடு, அமைச்சர் ரேவண்ணாவின் உறவினர்கள், நெருக்க‌மானவர்களின் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மண்டியா தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலும், ஹாசன் தொகுதியில் முதல்வரின் சகோதரரும், அமைச்சருமான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வலும் போட்டியிடுகின்றனர். அங்கு வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பண பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு மண்டியா, ஹாசன், மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மஜத நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்களின்வீடு மற்றும் அலுவலகம் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தினர். மண்டியா அருகேயுள்ள பாண்டவபுராவில் உள்ள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் புட்டராஜுவின் வீட்டில் சிஆர்பிஎஃப் படையினருடன் நுழைந்த அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதே போல மைசூருவில் உள்ள‌ புட்டராஜுவின் உறவினர்கள் அசோக், மஞ்சுநாத் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஹாசனில் பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணாவின் உறவினர்கள் அஷ்வத் நாராயணா, ஸ்ருதி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது, பிரஜ்வலுக்கு நெருக்கமான கட்டுமான ஒப்பந்ததாரர் ஃப்ரூக்கின் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ. 5 கோடி ரொக்கப்பணம் சிக்கியதாக தெரிகிறது.

இதனிடையே அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் மற்றும் அவரது உறவினர்களின் வீடு, தொழிலதிபர் கிருஷ்ண கவுடா ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடந்தது.

மோடியின் சர்ஜிகல் ஸ்டிரைக்

இந்த வருமான வரி சோதனைக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குமாரசாமி கூறும்போது, ''இது தான் மோடியின் உண்மையான சர்ஜிகல் ஸ்டிரைக். வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணாவுக்கு பதவி ஆசை காட்டி இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. வருமான வரிச் சோதனை நடைபெறவுள்ளதை நான் புதன்கிழமை மாலையே அறிவேன்”என்றார்.

அமைச்சர் புட்டராஜு கூறுகையில், ''என்னிடம் இருக்கும் 10 ரூபாய்க்கும் கணக்கு இருக்கிறது. அதனால் பயமில்லை''என்றார்.

இந்நிலையில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கர்நாடகாவில் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட எவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை. தொழிலதிபர்கள் வீடுகளில் மட்டுமே சோதனை நடந்தது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படவில்லை''என தெரிவித்துள்ளது.

இதனிடையே முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியை போல வேறு எந்த பிரதமரும் தரக்குறைவாக செயல்பட்டதில்லை. அரசின் நிறுவனங்களை சுயநலத்துக்காக பயன்படுத்துவது இழிவானது'' என கடுமையாக விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x