Published : 09 Mar 2019 10:00 AM
Last Updated : 09 Mar 2019 10:00 AM

இரண்டு சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் எழுப்பும் கேள்வி

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து ஆளும் பாஜக திரும்பத் திரும்ப கூறியது கூறல் மேற்கொள்ள எதிர்க்கட்சிகளும் தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

 

பன்னாட்டு ஊடகங்களும் உயர் தொழில்நுட்ப சாட்டிலைட் படங்களுடன் பாலகோட்டில் தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் கேள்விக்குறியாக உள்ளன என்று எழுதி வருகின்றன.  அதாவது அங்கு ஜெய்ஷ் அமைப்பின் மதரஸாக்கள் கட்டிடங்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படமால் அப்படியே இருப்பதாகவே சர்வதேச ஊடகங்கள் எழுதி வருகின்றன.

 

இந்நிலையில் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்களை நோக்கி பிரதமர் மோடி நேற்று சாடிய போது, பாகிஸ்தானே விமானத்தாக்குதல் பற்றி ட்வீட் செய்திருக்கிறது வேறு என்ன வேண்டும் என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்தார், “இப்படியொரு ட்வீட் செய்ய பாகிஸ்தான் என்ன முட்டாளா? இந்த நாட்டில் 130 கோடி மக்கள்தான் என் ஆதாரம். பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதை தயவு கூர்ந்து நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

எதிர்க்கட்சிகள், பன்னாட்டு ஊடகங்களும் பாலகோட் தாக்குதல் மீது ஐயம் எழுப்ப, இந்த வாரத்தில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் ‘ஆதாரம்’ கேட்டு அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் காட்டப்பட்ட மேற்கோளில் உ.பி. மாநில ராணுவ வீரர் ராம் வகீல் என்பவரின் சகோதரி ராம் ரக்‌ஷா என்பவர், “புல்வாமா தாக்குதலின் போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் உடல் பகுதிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் அது போன்று இப்போது எதுவும் நமக்குக் காணக்கிடைக்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு ஏறக்குறைய தாக்குதல் நடந்தவுடனேயே அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது.  பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எங்கு குண்டு போட்டனர். தெளிவான ஆதாரம் இருக்க வேண்டுமல்லவா? பாகிஸ்தான் கூறுகிறது ஒரு சேதமும் இல்லை என்று ஆகவே ஆதாரம் இல்லாமல் எப்படி நம்புவது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதே உ.பி.மாநில ஷாம்லியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ராணுவ வீரரின் தாயார், ‘அப்பகுதியில் ஒருவரும் பலியானதாகத் தெரியவில்லை. அந்தப்பக்கத்தில் சடலங்கள் எதுவும் காணப்படவில்லை. உண்மையில் சொல்லப்போனால் உறுதியான செய்திகள் எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளதையும் அந்த ஆங்கில ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது.

 

இந்நிலையில்தான் பிரதமர் மோடி, “130 கோடி இந்திய மக்கள்தான் என் ஆதாரம்” என்று பதிலளித்துள்ளார்.

 

(பிடிஐ தகவல்களுடன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x