Published : 21 Feb 2019 06:03 PM
Last Updated : 21 Feb 2019 06:03 PM

இந்தியா - பாக். இடையே பேச்சுவார்த்தை கோரினால் தேசவிரோதி ஆக்கப்படுகிறார்கள்: ஒமர் அப்துல்லா குற்றச்சாட்டு

இந்தியா - பாக். இடையே பேச்சுவார்த்தை கோருபவர்கள் தேசவிரோதியாக ஆக்கப்படுகிறார்கள் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

 

புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான தீவிரவாத முகாம்களை அழித்தனர். தற்போதும் அதேபோல பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக நாக்பூரில் அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''காஷ்மீரில் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுகட்ட ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு விட்டது, தீவிரவாதிகளின் இனிமேல் தப்பிக்க முடியாது, அவர்களின் தலைவிதி வீரர்களால் தீர்மானிக்கப்படும்'' என ஆவேசமாகப் பேசினார்.

 

இதற்கிடையே புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானின் மீது போர் தொடுக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா, ''அரசியல் தலைவர்களின் பாதுகாப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. ஒருபக்கம் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராக இருக்கச் சொல்கிறீர்கள். மற்றொரு புறம் காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்புக்கு நாங்கள் தகுதியற்றவர்கள் என்கிறீர்கள்.

 

நாங்கள் வன்முறைக்கோ, தீவிரவாதத்துக்கோ ஆதரவானவர்கள் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால் பேச்சுவார்த்தை கோருபவர்கள் ஆன்டி- இந்தியர் ஆக்கப்படுகிறார்கள். ஆனால் சவுதி அரேபியா உடனான கூட்டறிக்கையில், இரு நாட்டின் தலைவர்களும் பேச்சுவார்த்தை அவசியம் என்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, ''பேச்சுவார்த்தை என்ற ஒரு வழி இரண்டு தரப்புக்குமே இருக்கும்போது, போர் குறித்த கேள்விகள் எழுப்பப்படுவது ஏன்'' என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x