Last Updated : 02 Jan, 2019 12:47 PM

 

Published : 02 Jan 2019 12:47 PM
Last Updated : 02 Jan 2019 12:47 PM

இந்த ஆண்டும் இந்தியாவே சாதனை; புத்தாண்டில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு: உலகளவில் 3.95 லட்சம்

புத்தாண்டில் அதிகமான குழந்தைகள் பிறந்த வகையில் 2019-ம் ஆண்டும் இந்தியாவே சாதனை படைத்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது

கடந்த ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து ஐக்கியநாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நல அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''2019-ம் ஆண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேச நாடுகளில் பிறந்துள்ளன.

இந்தியாவில் அதிகபட்சமாக 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளன. அதைத் தொடர்ந்து சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளன.

பாகிஸ்தானில் 15 ஆயிரத்து 112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 256 மழலைகளும், அமெரிக்காவில் 11 ஆயிரத்து 86, காங்கோவில் 10 ஆயிரத்து 53, வங்கதேசத்தில் 8 ஆயிரத்து 428 குழந்தைகளும் பிறந்துள்ளன.

சரியாக 12 மணியை அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளன. டோக்கியாவில் 310 குழந்தைகளும், பெய்ஜிங்கில் 605 குழந்தைகளும், மாட்ரிட்டில் 166 குழந்தைகளும், நியூயார்க்கில் 317 குழந்தைகளும் பிறந்துள்ளன. புத்தாண்டு பிறந்தவுடன் உலகிலேயே முதல் குழந்தை பசிபிக்கில் உள்ள பிஜி நகரில் பிறந்தன'' என்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் சார்லோட்டி பெட்ரி கோரிநிட்கா கூறுகையில், “ உலகில் உள்ள பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாழ்வதற்குரிய உரிமையை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். ஆனால், உலகில் பல நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் முதல் நாளை நிறைவு செய்யமுடியாமல் கூட இறக்கின்றன. யுனிசெப் கணக்கின்படி கடந்த 2017-ம் ஆண்டில், உலக அளவில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த அன்றே இறந்துள்ளன. 25 லட்சம் குழந்தைகள் ஒருமாதத்தில் இறந்துள்ளன.

பெரும்பாலான குழந்தைகள் இறப்பு என்பது குறைப்பிரசவத்தாலும், பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள், நிமோனியா போன்ற தொற்றுகளாலும் இறக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க நாம் முதலீடு செய்தால், நாம் இன்னும் லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காக்கலாம் “ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x