Last Updated : 11 Oct, 2018 08:42 PM

 

Published : 11 Oct 2018 08:42 PM
Last Updated : 11 Oct 2018 08:42 PM

போஃபர்ஸ் வழக்கு: சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

போஃபர்ஸ் பீரங்கி ஒப்பந்த ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவைச் சேர்ந்த அஜய் அகர்வாலும், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து தாக்கல் செய்த மனுவும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் நடந்தது. கடந்த 1986-ஆம் ஆண்டில் ஸ்வீடனைச் சேர்ந்த ஏ.பி.போஃபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ரூ.1,437 கோடி ரூபாய் செலவில் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1987-ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு வானொலி ஒன்று இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக போஃபர்ஸ் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக செய்தியை வெளியிட்டது.

இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1990-ஆம் ஆண்டு போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பாக சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.

போஃபர்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் மார்டின் அர்த்போ, இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாக வின் சத்தா, ஹிந்துஜா சகோதரர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்தப் பீரங்கி பேர ஊழலில் இந்தியாவைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள், இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்று சிபிஐ குற்றம் சாட்டியது.

1999-ம் ஆண்டு வின் சாத்தா, இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோவியோ குவாத்ரோச்சி, அப்போதைய பாதுகாப்புத் துறைச் செயலாளர் எஸ்.கே.பட்னாகர் ஹிந்துஜா சகோதரர்களின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றது. ஆனால், வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர் நீதிமன்றம் ஹிந்துஜா சகோதரர்களை வழக்கில் இருந்து 2005-ம் ஆண்டு விடுவித்தது.

இந்நிலையில், குவாத்ரோச்சி 2013-ஆம் ஆண்டு மரணடைந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 20005-ம் ஆண்டு விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் சிபிஐ மேல்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பின், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த பிப்ரவரி மாதம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

மேலும், பாஜகவைச் சேர்ந்த அஜய் அகர்வாலும் தன்னை ஒரு மனுதாரராகச் சேர்க்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், மீண்டும் போஃபர்ஸ் வழக்கை விசாரிக்கக் கோரி சிபிஐ கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x