Published : 23 Aug 2018 09:01 AM
Last Updated : 23 Aug 2018 09:01 AM

கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த ரூ.700 கோடியை ஏற்க இந்தியா மறுப்பு: வெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டாம் என இந்திய தூதரகங்களுக்கு அறிவுரை

கேரளாவின் வெள்ள நிவாரணத் துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்த ரூ.700 கோடி நிதியுத வியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.

வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க வேண்டாம் என்று அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் இ-மெயில் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் அந்த மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி யது. ஒட்டுமொத்தமாக ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொரு ளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தை அதிதீவிர இயற்கைப் பேரிடராகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.700 கோடி வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

கடந்த 2004-ம் ஆண்டில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சுனாமி தாக்கியது. அப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்தன. அதனை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. அன்று முதல் இன்றுவரை இயற்கை பேரிடர்களின்போது வெளிநாட்டு நிதியுதவியை ஏற்பது இல்லை என்ற கொள்கையை மத் திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

கடந்த 2005 காஷ்மீர் நிலநடுக் கம், 2014-ல் காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளம், கடந்த 2013-ல் உத்தரா கண்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ள பாதிப்புகளின்போதும் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்தன. அவற்றை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதே அணுகுமுறையில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்த ரூ.700 கோடி நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளிநாடு களில் செயல்படும் அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் இ-மெயில் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "கேரள வெள்ள நிவாரணத் துக்காக நிதியுதவி அளிக்க முன் வரும் நாடுகளுக்கு நன்றி கூறுங்கள். அதேநேரம் அந்த நாட்டின் நிதியுதவியை ஏற்க வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறிய போது, "ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு கேரள மக்கள் அதிக மாக பங்களித்துள்ளனர். அதன் காரணமாகவே அந்த நாடு கேரளா வுக்கு அதிக நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. அந்த நாட்டை வேறு நாடாக கருத முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியபோது, மத்திய அரசிடம் ரூ.2000 கோடி கேட்டோம். ஆனால் ரூ.600 கோடி மட்டுமே அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவியை மத்திய அரசு எதற்காக தடுக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x