Last Updated : 25 Jul, 2018 11:13 AM

 

Published : 25 Jul 2018 11:13 AM
Last Updated : 25 Jul 2018 11:13 AM

ஆரணிப்பட்டு நெசவுத்தொழிலை காக்க மத்திய அரசின் சிறப்பு நிதி உதவி மக்களவையில் அதிமுக கோரிக்கை

ஆரணிப்பட்டு நெசவுத்தொழிலை காக்க மத்திய அரசின் சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்களவையில் நேற்று  அதிமுக எம்,பி வி.ஏழுமலை  கோரிக்கை வைத்தார்.

இது குறித்து அதிமுக உறுப்பினரான ஏழுமலை பேசியதாவது:

தமிழகத்தின் முக்கிய பட்டு மையமாக ஆரணி விளங்குகிறது. பாரம்பரிய பட்டு நெசவுத்தொழிலுக்கு ஆரணி மிகவும் புகழ் பெற்றது. இதன் நெசவுத்துணி மற்றும் பட்டு சேலைகள் மிகவும் சிறப்பு பெற்ற தரத்தை கொண்டவை. மத்திய அரசின் புவிஇயல் ரீதியாகப் பதிவு பெற்ற தொழில்களில் ஆரணியும் இடம் பெற்றுள்ளது.

நீண்டகால உழைப்பிற்கும், தரமான நிறத்திற்கு ஆரணிப்பட்டின் தொழில்நுட்பம் பெயர் பெற்றவை. இதன் நூல் திறன் எண்ணான 2400 ஆரணிப்பட்டிற்கு உறுதி தருபவை. அனைத்து காலங்களிலும் அணியத் தகுதி பெற்ற இந்தவகை துணி, பலகாலமாக ஆரணியில் நெய்யப்பட்டு வருகிறது.

இதற்கு குறைந்து வரும் கூலியால் அந்த தொழிலை அதன் இளம்தலைமுறையினர் செய்ய விரும்புவதில்லை. எனவே, இந்த தொழிலை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல அதன் பயிற்சிநிலையத்திற்கான அவசரதேவை ஏற்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசு ஆரணி நெசவாளர்களுக்கு சிறப்பு நிதிஉதவி அளித்து அவர்கள் பட்டு தொழிலை ஊக்குவிக்க வேண்டும். இதை உடனடியாக செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரிக்கு பாஸ்போர்ட் சேவை மையம்

அதிமுகவின் மற்றொரு உறுப்பினரான கே.அசோக்குமாரும் நேற்று மக்களவையில் உரையாற்றினார். அதில் அவர் தனது தொகுதியான கிருஷ்ணகிரியில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி, ஓசூர் என இருவட்டங்கள் கொண்ட தன் தொகுதியினர் பாஸ்போர்ட் பெற 120 கிமீ தொலைவில் திருவண்ணாமலைக்கும், 250 கி.மீட்டரில் உள்ள சென்னைக்கும் செல்ல வேண்ட்டி இருப்பதாகவும் அசோக்குமார் கவலை தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x