Last Updated : 19 Jul, 2018 08:55 PM

 

Published : 19 Jul 2018 08:55 PM
Last Updated : 19 Jul 2018 08:55 PM

நம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் இல்லை; பாஜக அரசின் தோல்விகளை வெளிப்படுத்துவோம்: ஆனந்த் சர்மா ஆவேசம்

பாஜக அரசுக்கு எதிராக நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலான விளையாட்டு அல்ல, மத்திய அரசின் தோல்விகளை மக்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு அதன்படி நடக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தெலுங்கு தேசம் கட்சி தான் அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் வெளியேறி போர்க்கொடி தூக்கியது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சீனிவாஸ் அளித்த மனுவையும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்த மனுவையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதமும், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''எங்களுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து நாளை ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம். நாங்கள் கொண்டுவரும் தீர்மானம் ஆளும் அரசுக்குக் கண்ணாடி போன்று இருக்கும். அரசின் தோல்விகள், நாட்டில் மக்கள் சந்தித்துவரும் பல்வேறு விஷயங்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவோம்.

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு போதுமான அளவில் பெரும்பான்மை இருக்கிறது என்பது தெரியும். ஆனால், இது எண்ணிக்கை அடிப்படையிலானது இல்லை. இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு, பல்வேறு விவகாரங்களை எழுப்பி மக்கள் முன் வெளிப்படுத்துவோம். இதுஒருவகையான தேர்தல் பிரச்சாரம், பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் ஒருவகையான பிரச்சாரமாகும்.

பிரதமர் மோடியின் அரசு பிரச்சாரத்தில்தான் நம்பிக்கை வைத்திருக்கிறது. மக்களின் பிரச்சினைகளை அறிவதிலும், நாட்டின் சிக்கல்களை அறிவதிலும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.

பிரதமர் மோடி பேச்சுத்திறமை மிக்கவர், மக்களிடம் கபடநாடகம் போட்டு சாதித்துவிடலாம் என நம்புகிறார்.

நாடு பல்வேறு சிக்கல்களில் சிக்கி இருக்கிறது, மக்கள் வேதனைப்படுகிறார்கள். அதுதான் மிகப்பெரிய பிரச்சினை. சர்வதேச அளவில் நாட்டின் தோற்றமே மோசமாகி இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமரிடம் இருந்து நம்பகத்தன்மையை எதிர்பார்க்கிறோம்.

பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு பதில் அளிக்கும் அரசாகவும், நம்பகத்தன்மை உள்ளதாகவும் இருக்க காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் இருப்பதால், மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். கருத்துகளைக் கூறும் மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். மக்கள் சுதந்திரமாக உடையையும், உணவையும் தேர்வு செய்ய முடியாத சூழல் இருக்கிறது. இந்த அரசு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது, நிர்வாகத்தில் ஏமாற்றிவிட்டது.''

இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x