Published : 04 Jun 2018 06:51 AM
Last Updated : 04 Jun 2018 06:51 AM

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பேசுவேன்: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உறுதி

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் நிச்சயமாக பங்கேற்பேன். நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ, அதை அந்த கூட்டத்தில் பேசுவேன் என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு வரும் 7-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகிறார். ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அவர் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறியபோது, “ஆர்எஎஸ்எஸ் மதவாத, பிரிவினைவாத இயக்கம். அந்த அமைப்பு குறித்து பிரணாப் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளார். தனது முந்தைய கருத்துகள் தவறானவை என்று பிரணாப் கருதுகிறாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஜாபர் ஷெரீப் உள்ளிட்டோரும் பிரணாப் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியபோது, “ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழைப்பை பிரணாப் ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த அமைப்பின் கொள்கைகளில் எது தவறு என்பது குறித்து கூட்டத்தில் பிரணாப் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வங்கமொழி நாளிதழுக்கு பிரணாப் அளித்துள்ள பேட்டியில், “ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என கடிதங்கள், கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றுக்கு நான் இதுவரை பதில் அளிக்கவில்லை. கூட்டத்தில் நிச்சயமாக பங்கேற்பேன். நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை அந்த கூட்டத்தில் பேசுவேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x