Last Updated : 11 Jun, 2018 02:20 PM

 

Published : 11 Jun 2018 02:20 PM
Last Updated : 11 Jun 2018 02:20 PM

காங்கிரஸ் இருக்கலாம்; காங்கிரஸ் கலாச்சாரம் தான் ஒழிக்கப்பட வேண்டும்: அமித் ஷா விளக்கம்

காங்கிரஸ் கட்சியை நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என விரும்பவில்லை. காங்கிரஸ் கலாச்சாரம் அகற்றப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 2 நாள் பயணமாக சட்டீஸ்கர் மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள அம்பிகாபூர் நகரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தனிநபர் தாக்குதலிலும் ஈடுபடுகிறீர்களே?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசுவதாக நீங்கள் நினைக்கக் கூடாது, நான் கூறுவதையும் ஊடகங்கள் திரிக்கக் கூடாது. ராகுல் காந்தி சில விஷயங்களை மக்கள் முன் வைக்கிறார், அதற்கான பதிலை, நானோ மத்திய அரசோ கூற முற்படும்போது ஏற்படும் வார்த்தை மோதல்தான். ஜனநாயக நாட்டில் ஒருவருக்கும் ஆபத்து கிடையாது.

ராகுல் காந்தியின் குடும்பத்தினர் தான் கடந்த 4 தலைமுறைகளாக, 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நாட்டில் உள்ள முந்தைய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் தலைவராக இப்போது இருக்கும் ராகுல்காந்தியிடம் தானே கேட்க முடியும்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வந்துவிட்ட பின், காங்கிரஸ் கட்சியின் முந்தைய தோல்விகள், சிக்கல்கள் குறித்து அவர்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். பாஜகவின் தலைவர் என்ற ரீதியில் நான் ராகுல் காந்திக்கு பதில் அளித்து வருகிறேன். இதில் எந்தத் தவறும் இல்லை.

எங்களின் கட்சியும், அரசும் மக்களுக்கான நல்ல பணிகளைச் செய்து வருகிறது, தொடர்ந்து இதுபோல் பணியாற்றுவோம். மக்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம்.

நாட்டில் காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட வேண்டும் ரீதியில் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ என்று பாஜக பேசி வருவது பற்றி?

நாங்கள் காங்கிரஸ் இல்லாத நாடு என்று ஒருபோதும் கூறவில்லை. காங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எதிர்க்கட்சிகள் இல்லாத நாட்டை நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை.

ஆனால், காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு இல்லை. இது ராகுல் காந்தியின் பொறுப்பாகும். உங்களின் கேள்வி தவறான நபரிடம்(என்னிடம்) கேட்கப்பட்டுள்ளது. சரியான நபரிடம்(ராகுலிடம்) கேட்டிருக்க வேண்டும்’’என்று கூறி சிரித்தார்.

பாஜகவைவிட்டு நடுத்தர மக்கள் ஒதுங்கிச் செல்வது உண்மையா?

பாஜகவைவிட்டு நடுத்தர மக்கள் ஒருபோதும் விலகிச் செல்லவில்லை. அவ்வாறு விலகிச் சென்று இருந்தால், தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று இருக்க முடியாது. இது பாஜக குறித்து தவறாக செய்யப்படும் பிரச்சாரமாகும். நடுத்தர வகுப்பு மக்களுக்கு பாஜக ஏராளமான நல்ல காரியங்களைச் செய்து வருகிறது. ஏராளமான திட்டங்களை மத்திய அரசு நடுத்தர மக்களுக்காக வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.

அனைத்துத் தரப்பு மக்களும் பாஜகவை ஆதரித்து வருவதால்தான், 14 மாநிலங்களில் பாஜகவால் ஆட்சியில் இருக்க முடிகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது, கடந்த 12 நாட்களாக விலை குறைந்துள்ளது, டீசல் விலை உயர்வு குறித்து அரசு அதிக கவனமும், அதேசமயம், கவலையும் அடைந்து இருக்கிறது.

மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் எல்லையில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து?

கடந்த 4 ஆண்டுகளில் எத்தனைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற பட்டியலை காங்கிரஸ் கட்சி முதலில் அளிக்க வேண்டும். மக்களின் மனதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. எல்லைப்பகுதிகள் பாதுகாப்பாக இருக்கின்றன.

இவ்வாறு அமித் ஷா பேட்டியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x