Last Updated : 04 Jun, 2018 06:52 AM

 

Published : 04 Jun 2018 06:52 AM
Last Updated : 04 Jun 2018 06:52 AM

கர்நாடக அமைச்சரவையில் இடம்பிடிக்க காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்கள் கடும் போட்டி

கர்நாடக அமைச்சரவையில் இடம்பிடிக்க காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸைச் சேர்ந்த பரமேஷ்வரும் கடந்த 23-ம் தேதி பதவியேற்றனர். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 22, மஜதவுக்கு 12 என இடங்கள் என முடிவானது.

இதில் நிதி, மின் துறைகள் உள்ளிட்ட 12 துறைகள் மஜதவுக்கும், உள்துறை உள்ளிட்ட 22 துறைகள் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அந்த துறைகளை வகித்த எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த டி.கே.சிவகுமார், கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இந்த முறையும் அவருக்கே மின்துறை ஒதுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அது மஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகுமார் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ரோஷன் பெய்க், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் இந்த முறையும் அமைச்சர் பதவி கோரியுள்ளனர். இதனிடையே, தலித், லிங்காயத்து, குருபா, ஒக்கலிகா பிரிவுகளைச் சேர்ந்த மூத்த எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் மேலிடத் தலைவர் வேணுகோபால், கட்சி மாநிலத் தலைவரும், துணை முதல்வருமான‌ பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் பெயர் பட்டியலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் காட்டி ஒப்புதல் பெற முடிவெடுத்துள்ளார்.

இதனிடையே, சாந்திநகர் எம்எல்ஏ ஹாரீஸ், கிருஷ்ணராஜபுரம் பைரத்தி பசவராஜ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் தங்களது எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல மஜதவில் உள்ள ஜி.டி.தேவகவுடா, விஸ்வநாத் உள்ளிட்டோர் அமைச்சர் பதவி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா, பொதுப்பணித்துறை அல்லது நிதித்துறையை எதிர்பார்க்கிறார். மஜத கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் தங்களது ஒரு எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டுள்ளது.

இதனால், மஜத தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 துறைகளை யாருக்கு வழங்குவது என தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x