Published : 30 Aug 2024 05:12 AM
Last Updated : 30 Aug 2024 05:12 AM

4 மந்திரங்களை தவறாது கடைபிடிக்க வேண்டும்: புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

மத்திய அமைச்சரவையில் முதல்முறையாக பதவியேற்றுள்ள புதிய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி.

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையில் முதன்முறையாக சேர்க்கப்பட்ட அமைச்சர்களை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதுகுறித்து மத்திய அரசின் வட்டாரங்கள் கூறும்போது: அமைச்சரவையில் முதன்முதலாக பங்கேற்றுள்ள அமைச்சர்களை சந்தித்த பிரதமர் அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார். அப்போது அவர் அமைச்சர்களிடம் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினார். மேலும்,“செயல், சீர்திருத்தம், மாற்றம், தகவல்” என்ற நான்கு புதிய மந்திரங்களை மக்கள் சேவையின்போது அமைச்சரவை சகாக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

அரசின் செயல்பாடுகள், அதன்சாதனைகள், பிரச்சாரம், விளம்பரம் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்ற செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்என்று அமைச்சர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். அதேநேரம், சமூக ஊடகங்களில் மக்களின் பங்கேற்பையும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மோடி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்யும்போது அந்தந்தஅமைச்சகங்களின் 10 முக்கியமுடிவுகள் குறித்து தகவல்களை வழங்கவும், அவற்றை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10-ம் ஆண்டு நிறைவை செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடும்வேளையில் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கிவைக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கேபினட் செயலர் ராஜீவ் கவுபா, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற 85 நாட்களில் இதுவரை எடுக்கப்பட்ட 73 முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளித்தார். நாட்டில் சுகாதாரம், கல்வி, மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தெடார்பான விளக்க காட்சிகள் இந்த கூட்டத்தில் இடம்பெற்றன.

மக்களுக்காக ஓய்வின்றி உழைக்க அமைச்சர்கள் தங்களை விரைவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x