Last Updated : 03 Jun, 2018 04:59 PM

 

Published : 03 Jun 2018 04:59 PM
Last Updated : 03 Jun 2018 04:59 PM

ரயில் ‘லேட்டா’ வந்தால், பதவி உயர்வு பாதிக்கும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கிடுக்கிப்பிடி

 ரயில்கள் குறித்த நேரத்துக்கு வராமல், தாமதமாக வந்தால், அந்த ரயில் நிலையத்துக்கு உட்பட்ட அதிகாரிகள், மேலாளர்களுக்குப் பதவி உயர்வில் தாமதம் செய்யப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாட்டில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. மிகப்பெரிய துறையாக ரயில்வே இருந்தபோதிலும், குறித்த நேரத்துக்குள் ரயில்கள் வராததும், தாமதமாக ரயில்களை எடுப்பதும் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கி வந்தது.

இதைக் களைவதற்காக சமீபத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மண்டல ரயில்வே மேலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, ரயில்கள் குறித்த நேரத்துக்குள் ரயில் நிலையங்களுக்குள் வருவதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். ரயில்கள் தாமதமாக வருவதற்கு ஏதாவது காரணங்களை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தால், அந்த ரயில்கள் வரும் நிலையங்களுக்கான மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், அதிகாரிகளின் பதவி உயர்வை நிறுத்த வேண்டியது இருக்கும்.

ரயில்கள் தாமதமாக வருவதையும் மதிப்பீடாக எடுத்துக்கொண்டு, அவர்களின் பதவி உயர்வை கணக்கில் கொள்ளப்படும். இதனால், அவர்களுக்குக் குறித்த நேரத்தில், ஆண்டில் பதவி உயர்வு வருவதில் சிக்கல் ஏற்படும். ஆதலால், ரயில்கள் குறித்த நேரத்துக்கு வருவதை மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ரயில் இருப்புப்பாதைப் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன அதனால் தாமதம் ஏற்படுகிறது என்ற காரணத்தை தொடர்ந்து கூறுவது ரயில்வே மீதான மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைத்துவிடும் என அமைச்சர் பியூஷ் கோயல் கடிந்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017-18-ம் ஆண்டில் ரயில்வே துறையில் இயக்கப்படும் ரயில்களில் 30 சதவீதம் ரயில்கள் தாமதமாக வந்துள்ளன. அதிலும் குறிப்பாக கோடைக் காலத்தில் மக்கள் வெளியூர், சுற்றுலா செல்வதற்கு கூட குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

ஆனால், வடக்கு மண்டல ரயில்வே பொதுமேலாளர், மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை மறுக்கிறார். கடந்த 2016-17 ஆம் ஆண்டைக்காட்டிலும் 201-17-18 ஆம் ஆண்டில் ரயில்வே துறை நேரத்தைக் கடைப்பிடிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஒவ்வொரு மண்டலத்தின் பொதுமேலாளரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து ரயில்களின் தாமதத்தின் சதவீதம் குறித்து கேட்டறிந்து, அதை விரைவாகக் களையும் படி உத்தரவிட்டுள்ளார். மேலும், தாமதத்துக்கான காரணத்தையும் மேலாளர்களிடம் கேட்டு, விளக்கமும் அளிக்கக் கோரியுள்ளார். ரயில்கள் குறித்த நேரத்துக்கு இயக்கப்படுவதையும், வருவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பதால், அதில் கூடுதல் அக்கறையை மேலாளர்கள் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கோயல் அறிவுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ரயில்வேயில் தேவையில்லாமல் செய்யப்படும் செலவுகளையும் குறைக்க மேலாளர்களுக்கு அமைச்சர் கோயல் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் டெல்லியில் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் ரூ.25 லட்சத்தில் ஒரு புதிய கூரை அமைக்கப்பட்டது. இதுபோன்ற தேவையில்லாத செலவுகளையும், மக்களின்பயன்பாட்டுக்கு உதவாத பணிகளையும் செய்ய வேண்டாம். அதை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்றும் மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x