Last Updated : 11 May, 2018 07:04 PM

 

Published : 11 May 2018 07:04 PM
Last Updated : 11 May 2018 07:04 PM

மத்திய அரசுக்குப் பதிலடி: நீதிபதி கே.எம். ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமர்த்த கொலிஜியம் பரிந்துரை

உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்த உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.

கே.எம்.ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கி கொலிஜியம் அனுப்பிய பரிந்துரையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் நிராகரித்து, மறுபரிசீலனைக்கோரி திருப்பி அனுப்பியது. ஆனால், மறுபரிசீலனைக்கு இடமில்லை என்ற ரீதியில் கே.எம். ஜோஸப் நியமனத்தை உறுதி செய்துள்ளது கொலிஜியம் அமைப்பு.

2 நீதிபதிகள் பதவி உயர்வு

கடந்த ஜனவரி 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, 2 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஒருவர் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, மற்றொருவர் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்.

ஏற்க மறுப்பு

இதில் இந்து மல்ஹோத்ராவின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு நீதிபதி ஜோசப் பெயரை ஏற்க மறுத்து, அவரின் பெயரை மறு பரிசீலனை செய்யக் கோரி கொலிஜியத்துக்கு திருப்பி அனுப்பியது.

நீதிபதி ஜோஸப்புக்கு முன் சீனியாரிட்டி அடிப்படையில் 11 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதாலும், கேரளாவில் இருந்து போதுமான அளவில் பிரதிநிதித்துவம் கொடுத்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆதலால், தற்போது ஜோசப்பின் பெயருக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்பதால் மீண்டும் ஆய்வு செய்யவும் என்று கொலிஜியத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் 26-ம் தேதி பதில் அனுப்பியது.

இதனால், நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிப்பதில் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் உருவாகியது.

மத்திய அரசு மறுப்பது ஏன்?

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் தலைமை நீதிபதியாக ஜோசப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் தலைமையிலான அரசில் குழப்பம் விளைவித்து, எம்எல்ஏக்களை உடைத்து ஆட்சியில் பாஜகவினர் குழப்பத்தை விளைவித்தனர்.

இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அது தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, மீண்டும் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் ஆட்சியைக் கொண்டுவந்தார். இது அப்போது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தக் காரணத்தால் கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்த, மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், கடந்த வாரம் கொலிஜியம் கூடி 30 நிமிடங்கள் கூடிய இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆனால், எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல், ஜோஸப் விவகாரத்தில் முடிவை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே. செலமேஸ்வர் கொலிஜியம் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதில் ஜோஸப் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மீண்டும் பரிந்துரைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.

அவசரக் கூட்டம்

அதன்படி கொலிஜியத்தின் அவசரக்கூட்டம் இன்று நடந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், எம்.பி. லோக்கூர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய் பங்கேற்றனர்.

கொலிஜியத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒரு மணிநேரம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும் நீதிபதிகள் பட்டியலில், நீதிபதி ஜோஸப்பின் பெயரை மீண்டும் சேர்த்து மத்திய அரசுக்கு அனுப்புவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

ஒருவேளை இந்த விஷயத்தில் இந்த மீண்டும் ஆலோசனை ஏதும் தேவைப்பட்டால், அல்லது ஜோஸப்பின் பெயரோடு மற்ற நீதிபதிகளின் பெயரும் சேர்த்து அனுப்புவது என்று முடிவு செய்ய வேண்டுமென்றால், அது குறித்து வரும் 16-ம் தேதி கூட்டத்தில் பேசப்படும் என முடிவு செய்யப்பட்டது.

கொலிஜியம் மீண்டும் நீதிபதி ஜோஸப் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசுக்கு மீண்டும் பரிந்துரைத்துள்ளது. ஆதலால், இதை நிராகரிக்க அரசுக்கு உரிமை இல்லை. அதே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை மிஸ்பண்ணிடாதீங்க.. இதையும் படிங்க..

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x