Published : 20 Aug 2024 05:06 AM
Last Updated : 20 Aug 2024 05:06 AM

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவாகும்: மேட்ரைஸ் அமைப்பின் கருத்துக் கணிப்பில் தகவல்

மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, 25,அக்டோபர் 1-ம் தேதிகளில் 3 கட்டமாகவும், ஹரியானாவுக்கு அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியும், ஜார்க்கண்ட் மாநில சட்ட பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியும் முடிவடைகிறது. எனவே, மகாராஷ்டிர மாநில பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றுகருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மேட்ரைஸ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் உள்ளனர்.

கடந்த 2019-ல் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே),தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் (சரத் பவார்) இணைந்த மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி ஆட்சி 2022-ல் முடிவுக்கு வந்தது.

சிவசேனா கட்சியை உடைத்த ஏக்நாத் ஷிண்டே, தனது எம்எல்ஏக்களுடன் சென்று பாஜகவுடன் கூட்டணியை அமைத்து முதல்வரானார்.

இந்நிலையில், தற்போது எம்விஏ கூட்டணியில் உள்ள சிக்கல்கள், மோதல்களால் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வரும் தேர்தலில் வாய்ப்புள்ளது என்று மேட்ரைஸ் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

எம்விஏ கூட்டணிக்குள் உள்ள பிளவுகள், மோதல்களால் பாஜக அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்று தெரிகிறது.

இருந்தபோதும், பாஜக, சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே பேரவைத் தேர்தலில் கடும் மோதல் இருக்கும் என்று தெரிகிறது. இந்த தேர்தலின்போது 42 தொகுதிகளில் இந்த 2 கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

மேட்ரைஸ் அமைப்பின் கருத்துக்கணிப்பின்படி பாஜகவுக்கு 25.8 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 18.6 சதவீத வாக்குகளும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு 17.6 சதவீத வாக்குகளும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு 14.2 சதவீத வாக்குகளும், அஜித் பவார்தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 5.2 சதவீத வாக்குகளும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 6.2 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று மேட்ரைஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதர கட்சிகள் 12.4 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 பேரவைத் தொகுதிகள் உள்ளன. கருத்துக்கணிப்பின்படி பாஜக 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 19 முதல் 24 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 7 முதல் 12 இடங்களிலும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 42 முதல் 47 இடங்களையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 26 முதல் 31 இடங்களையும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 23 முதல் 28 இடங்களையும், மற்ற கட்சிகள் 11 முதல் 16 இடங்களையும் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த 2019-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலின்போது பாஜக 105 இடங்களையும், ஒருங்கிணைந்த சிவசேனா கட்சி 56 இடங்களையும், ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியது.

இதையடுத்து உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்ற மகாவிகாஸ் கூட்டணியை உருவாக்கி முதல்வர் பதவியில் அமர்ந்தார். ஆனால் 2022-ல் இந்த கூட்டணியை, ஏக்நாத் ஷிண்டே உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x