Published : 08 Aug 2024 04:47 AM
Last Updated : 08 Aug 2024 04:47 AM

வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்: வெளியுறவு அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வங்கதேசத்தில் நிலவும் அரசியல்பதற்றம் குறித்து நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. அப்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். இது தொடர்பாக மக்களவையில் அவர் கூறியதாவது:

வங்கதேசத்தில் வாழும் இந்திய மக்களுடன் தூதரகங்கள் மூலமாக தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். வங்கதேசத்தில் உள்ள 19,000 இந்தியர்களில் 9,000 பேர் மாணவர்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பெரும் பாலான இந்திய மாணவர்கள் கடந்த ஜூலை மாதமே இந்தியா திரும்பிவிட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் டாக்காவில் குவிந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறுகிய கால அனுமதி கோரி திங்கள்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தார்.

கடந்த ஜனவரி மாதம் வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற்றதிலிருந்தே அங்கு அரசியல் பதற்றமும், சமூக பிளவும் பூதாகரமாக ஏற்படத் தொடங்கியது. வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையினரையும் இந்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியா-வங்கதேசம் இடையில் நல்லுறவு பேணப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x