Published : 08 Aug 2024 05:40 AM
Last Updated : 08 Aug 2024 05:40 AM

ஆயுதங்களுடன் வந்து தாக்கிய 8 பேர் கும்பலிடம் இருந்து தந்தையை காப்பாற்றிய சத்தீஸ்கர் சிறுமி

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் நாராயண்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் சோம்தார் கோர்ரம். முன்விரோதம் காரணமாக சோம்தாரை கொலைசெய்வதற்காக 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் அவரதுவீட்டுக்குள் புகுந்து சரமாரியாக கோடரியால் அவரை வெட்டி யுள்ளது.

இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்த சோம்தாரின் 17 வயது மகள் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது தந்தையை சுற்றிவளைத்து தாக்கிய அந்த கும்பலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 8 பேர் கும்பலில் இருவரிடம் துப்பாக்கியும் இருந்துள்ளது. ஆனால், இதை எதைப்பற்றியும் கவலைப்படாத அந்த சிறுமி தந்தையை தாக்கியவர்கள் மீதுசீறிப்பாய்ந்து அவர்களிடம் கடுமையாக போராடி ஆயுதங்களை பிடுங்கியுள்ளார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத அந்த கும்பல் திகைத்து நின்று சுதாரிப்பதற்குள் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்துஅந்த கும்பலை விரட்டியடித்துள்ளனர். சரியான நேரத்தில் இடையில் புகுந்து ஆயுதங்களை பறிக்க சிறுமி எடுத்த அந்த முயற்சி அவரது தந்தை உயிர் பிழைப்பதற்கான பொன்னான வாய்ப்பாக அமைந்து விட்டது.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு என்ற பழமொழிக்கு ஏற்ப மார்பில் வெட்டு காயத்துடன் மட்டும் தப்பிய சிறுமியின் தந்தை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தந்தையை காப்பாற்ற தனது உயிரை துச்சமென மதித்து கும்பலிடம் போராடிய பழங்குடியின சிறுமியின் வீரத்தை அந்த ஊர் மக்கள் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x