Last Updated : 31 May, 2018 08:25 PM

 

Published : 31 May 2018 08:25 PM
Last Updated : 31 May 2018 08:25 PM

விமான உதிரிப்பாக ஊழல்?: மத்தியப் பாதுகாப்புத் துறை மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் உக்ரைன் அரசு

ஏஎன்-32 விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்கியதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி லஞ்சம் வழங்கியதாக உக்ரைன் அரசு குற்றச்சாட்டு கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உக்ரைன் தேசிய ஊழல் எதிர்ப்பு அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது.

இந்திய விமானப்படையின் போக்குவரத்துப் பிரிவில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர ரக ஏஎன்-32 வகை விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி உக்ரைன் அரசின் பெட்ஸ்டெக்னோ எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும், மத்திய பாதுகாப்பு துறைக்கும்(விமானப்படை) இடையே உதிரிப்பாகங்கள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த உதிரிப்பாகங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு சப்ளை செய்வதாக இருந்தது. இதற்கிடையே உக்ரேன் நிறுவனம், இந்த உதிரிப்பாகங்கள் சப்ளை செய்வது தொடர்பாக குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஒப்பந்தம் நடந்து 11 மாதங்களுக்குப் பின் உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்புக்கு ஒப்பந்தம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி(26 லட்சம் டாலர்கள்) கைமாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது, ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியது, கையொப்பம் இட்டது ஆகியவற்றின் அடையாளங்கள் குறித்து உக்ரைன் ஊழல்தடுப்பு அமைப்பு விசாரிக்கத் தொடங்கியது.

மேலும், குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தொடர்பு, பணம் பரிமாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துபாயில் உள்ள நூர் இஸ்லாமிக் வங்கி ஆகியவற்றிடம் விசாரணை நடத்த முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த வங்கிக்கும், குளோபல் மார்கெட்டிங் நிறுவனத்துக்கும் உக்ரைன் அரசு கடிதம் எழுதி, பணப்பரிமாற்ற விவரங்களைக் கேட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் உக்ரைன் அரசின் ஊழல் தடுப்பு அமைப்பு கடிதம் எழுதி, விசாரணைக்கு உதவும்படி கோரியுள்ளது. இந்தக் கடிதத்தை கீவ் நகரில் உள்ள இந்தியத்தூதர் வாயிலாக அனுப்பியுள்ளது உக்ரைன் அரசு. இந்த ஊழல் விவகாரம் தற்போது வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி கேள்வி

rahul-gandhi-jpgராகுல் காந்தி100 

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விடுத்த அறிக்கையில், உக்ரைன் அரசிடம் இருந்து ஏஎன்32 விமானங்களுக்கு உதிரிப்பாகங்கள் வாங்கியது தொடர்பாக பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் கோடிக்கணக்கில் துபாய் வங்கி வழியாக லஞ்சம் பெற்றதாக செய்திகள் வந்துள்ளன.

நாட்டைப் பாதுகாக்கும் காவலாளி எனச்சொல்லிக்கும் பிரதமர் மோடி, உங்கள் அரசின் பாதுகாப்பு துறையில் இருக்கும் ஊழல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ராஜ்நாத் சிங் மழுப்பல்

rajnath-singhjpgமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்100 

போபால் நகருக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங்கிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்ட போது அதுபோன்ற கடிதம் ஏதும் உக்ரைன் அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை, அந்த விவகாரம் குறித்து எனக்குத் தெரியாது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x