Last Updated : 22 May, 2018 04:11 PM

 

Published : 22 May 2018 04:11 PM
Last Updated : 22 May 2018 04:11 PM

குமாரசாமி பதவியேற்கத் தடை கோரும் மனு: அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியை ஆட்சி அமைப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, குமாரசாமி முதல்வராக பதவி ஏற்பதை நிறுத்திவைக்கக் கோரி அகில பாரத் இந்து மஹாசபா உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தது.

அவசர வழக்காகக் கருதி இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்று இந்து மஹாசபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவை ஆளுநர் வாஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைத்து, முதல்வராக எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்த காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்குப் பெரும்பான்மை இருந்தும் அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நீருபிக்க முடியாமல் பாஜக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணியை ஆளுநர் அழைத்தது அரசியலமைப்புச் ச ட்டத்துக்கு விரோதமானது. குமாரசாமி பதவி ஏற்பை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கோரி அகில பாரத் இந்து மஹாசபா சார்பில் வழக்கறிஞர் பருண் குமார் சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில்

ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்று கூட்டணி அமைத்துள்ளனர். இது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது.

மோசடி வேலைகளையும், சந்தர்ப்பவாதத்தையும், பயன்படுத்தி இரு கட்சிகளும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். மக்களின் தீர்ப்பின் அடிப்படையில்தான் மாநிலத்தில் ஒரு ஆட்சி நடக்கவேண்டும். ஆனால், பதவியில் இருந்த ஒருகட்சியை மக்கள் தூக்கி எறிந்த நிலையில், அதே கட்சியோடு கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வருவது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.

நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இதை ஆளுநர் கருதிவிட்டார். ஆனால் இரு கட்சிகளும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதத்தால் கூட்டணி அமைத்துள்ளன. மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், அவர்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநர் ஆலோசிக்கவில்லை. இதுபோன்ற செயல்கள் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம் கான்வில்கர், நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து மஹாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பருண் குமார் இந்த மனுவை அவசரவழக்காகக் கருதி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரணை நடத்தக் கோரியுள்ளீர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது, வழக்கமான பட்டியலில் வரும் போது விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள், மனுதாரர் வழக்கறிஞரிடம் தெரிவித்து கோரிக்கையை நிராகரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x