Published : 22 Apr 2018 08:47 AM
Last Updated : 22 Apr 2018 08:47 AM

திட்டங்களை அமல்படுத்த புதுமையான தொழில்நுட்பத்தை அரசு அதிகாரிகள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

அரசு திட்டங்கள், கொள்கைகளை அமல்படுத்துவதற்காக புதுமையான தொழில்நுட்பத்தை அதிகாரிகள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12-வது சிவில் சர்வீஸ் தின விழா டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற நிறைவு நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்காக சிவில் சர்வீஸ் அதிகாரிகள் பாடுபட்டு வருகின்றனர். அதேபோல நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாக இருப்பது பங்கேற்பு ஜனநாயகமாகும். சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் நிர்வாகத்தின் இலக்கு என்பது பிரிட்டிஷாரின் பாதுகாப்பு மட்டுமே என்பதாக இருந்தது.

கூடுதல் பலம்

ஆனால் இப்போது சாதாரண மனிதரின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டியுள்ளது. அரசு கொள்கைகளை, திட்டங்களை அமல்படுத்துவதற்காக புதுமையான தொழில்நுட்பங்களை அதிகாரிகள் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். இதனால் அந்தத் திட்டம் கூடுதல் பலம் பெறும். புதுமையான தொழில்நுட்பத்தைக் கொண்டு சிறந்த முறையில் திட்டங்களை அமல்படுத்தும்போது அவை மக்களிடம் எளிதாகச் சென்று சேரும்.

மக்கள் பங்களிப்பு

மேலும் அரசு திட்டங்களில் மக்களைப் பங்கேற்கச் செய்து வெற்றி பெறச் செய்யவேண்டும். புதிய கொள்கைகள், திட்டங்கள், சட்டங்களை அதிகாரிகள் உருவாக்கும்போது அதில் மக்கள் நலனுக்கு முக்கியத்துவத்தை அளிக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக புதிய பாதைகள் என்ற தலைப்பிலான 2 புத்தகங்களை பிரதமர் வெளியிட்டார். அரசு திட்டங்களை மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட வெற்றிக் கதைகள் அடங்கிய தொகுப்பாகும் இது. இதைத் தொடர்ந்து மாவட்டங்களில் சிறப்பாக மக்கள் பணியாற்றிய பல்வேறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x