Published : 22 Apr 2018 09:10 AM
Last Updated : 22 Apr 2018 09:10 AM

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸ்; நீதித் துறை மீது தாக்குதல் நடக்கிறது: எதிர்க்கட்சிகள் மீது இணை அமைச்சர் விஜய் கோயல் குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் வழங்கி இருப்பது நீதித்துறை மீதான தாக்குதல் என மத்திய அமைச்சர் விஜய் கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவை நேற்று முன்தினம் சந்தித்தது. அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பதவியை தவறாக பயன்படுத்துவதால், அவருக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஒரு நோட்டீஸை வழங்கியது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் விஜய் கோயல் நேற்று கூறியதாவது:

தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் வழங்கி இருப்பது நீதித் துறை மீதான தாக்குதல் ஆகும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் தலைமை நீதிபதி அலுவலகத்தின் மாண்பை குறைக்கவும் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீதிபதி லோயா மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தாங்கள் விரும்பியபடி அமையாததால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது.

தேர்தலில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதும் குற்றம் சாட்டத் தொடங்கினர். இதுபோல, குறிப்பிட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகவில்லை என்பதால் நீதித் துறை மீதும் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 124 (4)-ன் கீழ் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் ஒரு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்க முடியுமே தவிர, பதவி நீக்கம் செய்ய முடியாது. அதேநேரம், பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற இரு அவைகளில் உள்ள 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x