Published : 10 May 2024 06:58 PM
Last Updated : 10 May 2024 06:58 PM

பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிய நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக சாக்சி மாலிக் உள்ளிட்ட 6 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி இருந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். இதையடுத்து, டெல்லி போலீசார் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரியங்கா ராஜ்பூட், இன்று தனது உத்தரவை பிறப்பித்தார். அதில் அவர், "மல்யுத்த வீராங்கனைகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் இருக்கிறது. எனவே, பிரிஜ் பூஷன் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354, 354-ஏ, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமர் மீது பிரிவு 506-ன் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மொத்தம் 6 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், 5 பேரின் புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6-வது நபரின் புகாரில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

டெல்லி நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள பிரிவுகளின் கீழ் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள டெல்லி போலீசார், 354D என்ற பிரிவையும் கூடுதலாக சேர்த்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்பியானா பிரிஜ் பூஷன் சிங்கை, மீண்டும் வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று பாஜக முடிவு செய்தது. அவருக்குப் பதிலாக அவரது மகன் கரண் பூஷன் சிங்கை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பு பிரிஜ் பூஷன் சிங்குக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x