Published : 03 May 2024 07:57 AM
Last Updated : 03 May 2024 07:57 AM

ஆந்திராவில் 28,000 மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறை தொடக்கம்

கோப்புப்படம்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த நடக்க இயலாத மூத்த குடிமக்கள், மாற்று திறனாளி வாக்காளர்கள் மொத்தம் 28 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்காக நேற்று முதல் வீட்டிலிருந்தே வாக்கு அளிக்கும் முறை தொடங்கியது.

ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வரும் 13-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை மற்ற 25 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. இதில் வீட்டிலிருந்தே வாக்களிக்க 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து கொண்டனர். இவர்கள் வியாழக்கிழமை முதல் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் மொத்தம் 4.14 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 46,389 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் அதிக பட்சமாக 1,500 வாக்காளர்கள் வாக்களிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை 1500-ஐ விட அதிக வாக்காளர்கள் இருந்தால், கூடுதல் மையம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி மாநிலத்தில் 224 கூடுதல் வாக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 864 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தகராறில் இதுவரை 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 156 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் கூடுதலாக மாநில எல்லைகளில் 150 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது வரை ரூ. 203 கோடி மதிப்புள்ள பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தை வெயில் வாட்டி வருகிறது. இந்த கோடை வெயிலில் கட்சி நிர்வாகிகள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் வரும் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

காலை 8 மணி முதலே ஆந்திராவில் வெயிலின் கடுமையான தாக்கம் ஆரம்பித்து விடுகிறது. மாலை 5 மணி வரை வெப்பக்காற்று வீசி வருவதால், முதியோர், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை உள்ளது.

இதனால், 13-ம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவின் போது மாலை கூடுதலாக ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவு நடத்திட அனுமதி வழங்க வேண்டுமென கோரி தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியான கனகமேடல ரவீந்திர குமார் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x