Published : 20 Apr 2024 08:52 PM
Last Updated : 20 Apr 2024 08:52 PM

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.20: ராகுல் Vs மோடி வார்த்தைப் போர் முதல் டிடி நியூஸ் ‘காவி’ சர்ச்சை வரை

“பாஜக 150-ஐ தாண்டாது” - ராகுல் காந்தி பேச்சு: “பாஜகவினர் அதிகப்படியான இடங்களைப் பெறுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள். இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம்” என்றார்.

முன்னதாக, சமூக வலைதள பதிவொன்றில், "ஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார், ரெய்டு மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி, நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் விநியோகிப்பது எப்படி என்பது பற்றி பிரதமர் பாடம் நடத்துகிறார்" என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

“வயநாட்டிலும் காங்கிரஸ் இளவரசர் தோற்பார்” - பிரதமர் மோடி: “கடந்த முறை அமேதியில் தோற்றது போலவே இந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாட்டிலும் காங்கிரஸின் இளவரசர் தோல்வியைத் தழுவுவார். அதற்கு பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்தை அவர் தேட வேண்டும்” என்று ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு விகித அறிவிப்பில் தெளிவின்மை: தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றி மக்களவை தேர்தல் வெள்ளிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 69.46% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெளிவற்ற வாக்கு விகித வேறுபாடு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, 72.47% வாக்குகள் பதிவான கடந்த 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 3.01 சதவீத குறைவு ஆகும்.

சென்னை வாக்குப்பதிவு - ராதாகிருஷ்ணன் விளக்கம்: “வாக்களிப்பதில் நகர்ப்புறங்களில் மக்களிடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகமான வாக்குப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், இந்த வாக்குப்பதிவு சதவீதமும் வந்திருக்காது” என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்: இபிஎஸ்: “தமிழகத்தில் வரும் ஜூன் 4 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“வாக்குச்சாவடியை கைப்பற்ற திமுகவினர் முயற்சி” - தமிழிசை புகார்: தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி‌ எண்-13ல், திமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், எனவே, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளதாகவும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மேகேதாட்டு விவகாரம்: முதல்வருக்கு அன்புமணி கேள்வி: மோசடி செய்தாவது மேகேதாட்டு அணையை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

காவி மாறிய தூர்தர்ஷன் லோகோ - எதிர்க்கட்சிகள் கண்டனம்

அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலான டிடி நியூஸின் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

மாநிலங்களவை உறுப்பினரும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலருமான ஜவாஹர் சர்க்கார் இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடும்போது, “தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க லோகோவை காவி நிறத்தில் மாற்றியிருப்பதை கவலையுடனும் எச்சரிக்கையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சார பாரதி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“பாஜகவின் ‘400 இடங்கள்’ என்ற படம் முதல் நாளே தோல்வி”: 400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்து விட்டது என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பிஹார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார். மேலும், பிஹார் மக்கள் இந்த முறை அதிர்ச்சி தரும் முடிவுகளைத் தருவார்கள். பிஹார் மக்களுக்கு பாஜக எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு: டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மணிப்பூரில் 47 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு கோரும் காங்,: மணிப்பூரில் 47 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கோரிக்கை மனு அளித்துள்ளது.

“அரசியலமைப்பு என்பது பாஜகவுக்கு வெற்று காகிதம்தான்”: “மோடியைச் சார்ந்தவர்களுக்கு அரசியலமைப்பு என்பது எதற்கும் மதிப்பில்லாத வெற்று காகிதத் துண்டுதான். மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் பல சட்டங்களை இயற்றியுள்ளது ஆளும் பாஜக அரசு” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x