காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ - ‘பிரச்சார பாரதி’ என எதிர்க்கட்சிகள் கண்டனம்

காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ - ‘பிரச்சார பாரதி’ என எதிர்க்கட்சிகள் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

பாஜக அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இது பற்றி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் டிடி நியூஸ் நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், “எங்களின் மதிப்புகள் அப்படியே இருக்கும்போது, ​​நாங்கள் இப்போது ஒரு புதிய அவதாரத்துக்கு தயாராக இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்துக்குத் தயாராகுங்கள். புதிய டிடி செய்திகளின் அனுவத்தைப் பெறுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினரும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலருமான ஜவாஹர் சர்க்கார் இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடும்போது, “தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க லோகோவை காவி நிறத்தில் மாற்றியிருப்பதை கவலையுடனும் எச்சரிக்கையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சார பாரதி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in