Published : 22 Apr 2018 08:58 AM
Last Updated : 22 Apr 2018 08:58 AM

விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு மருந்து கொடுத்து சோதித்த நிறுவனம்: ஆபத்தான நிலையில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி

ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரித்த மருந்துகளை விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு கொடுத்து சோதனை நடத்தியுள்ளது. இந்த விபரீத சோதனையின் விளைவாக, 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக, புதிதாக தயாரிக்கப்படும் மருந்துகளை எலி, முயல், குரங்கு ஆகிய விலங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்து பார்ப்பது வழக்கம். ஒருவேளை, மருந்துகளில் இருக்கும் மூலக்கூறுகளின் கலவை சரியாக இல்லாதபோது, அவற்றை உட்கொள்ளும் பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். சில நேரங்களில் உயிரிழக்கும் சூழலும் உருவாகும். மனித உயிர்களுக்கு மதிப்பளித்தே, இவ்வாறு விலங்குகளிடம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தானின் பீடாஸர் பகுதியில் இயங்கி வரும் வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரித்த மருந்துகளை மனிதர்களுக்கே நேரடியாக கொடுத்து விபரீத சோதனையை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நாளொன்றுக்கு ரூ.500 ஊதியம் என்ற வீதத்தில், 21 பேரை கடந்த மூன்று நாட்களுக்கு முன் அந்த நிறுவனம் வேலைக்கு சேர்த்துள்ளது. மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஆள் எடுப்பதாகக் கூறி அவர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டுள் ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், தாங்கள் தயாரித்த புதிய மருந்துகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், புதிய தொழிலாளர்கள் 21 பேருக்கு கொடுத்துள்ளனர். மருந்துகளை உட்கொண்ட 16 பேர் மயக்கமடைந்தனர். அங்குள்ள அதிகாரிகள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் காளி சரண் ஷராப் தெரிவித்துள்ளார். - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x