Published : 14 Apr 2024 05:00 PM
Last Updated : 14 Apr 2024 05:00 PM

‘வெட் இன் இந்தியா’ திட்டம் முதல் அயோத்தி வளர்ச்சி வரை... - பாஜக தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ முழக்கத்தை அடிப்படையாக கொண்டு 'சங்கல்ப் பத்ரா' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கை 'GYAN' என்ற ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய நான்கு சமூகங்களை மையப்படுத்தியுள்ளது. பாஜக அளித்துள்ள வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பெண்களுக்கான வாக்குறுதிகள்:

 • லக்பதி திதி சுயஉதவி குழு மூலம் கிராமப்புறங்களில் உள்ள 3 கோடி பெண்கள் தொழில்முனைவோர்களாக மாற்றப்பட்டு 3 கோடி பெண் லட்சாதிபதிகளாக உருவாக்கம்.
 • பெண்களுக்கு ரூ.1 விலையில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
 • முக்கிய சேவைத் துறைகளில் திறன்கள் அடிப்படையில் பெண்கள் சுயஉதவி குழுக்களை (SHGs) அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேம்படுத்துதல்.
 • பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், குழந்தைகள் காப்பகங்கள் கட்டுவது போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம்.
 • விளையாட்டு வீராங்கனைகளை அதிகப்படுத்தும் நோக்கில் பெண்களை மையப்படுத்திய திட்டங்கள் உருவாக்கம்.
 • பொது இடங்களில் பெண்களுக்கு அதிக அளவில் கழிப்பறைகள் கட்டுதல்.
 • நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நாரி சக்தி வந்தன் அதினியம் திட்டம் அமல்.
 • காவல் நிலையங்களில் சக்தி டெஸ்க் விரிவுபடுத்தப்படும்.

ஏழைகளுக்கான வாக்குறுதிகள்:

 • இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு.
 • பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய கவனம் மற்றும் விலையை நிலைப்படுத்த நடவடிக்கை.
 • இலவச மருத்துவ சேவைக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
 • பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் விரிவுபடுத்தப்படும்.
 • அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம்.
 • பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சோலார் மின்சாரம் வழங்குவதன் மூலம் மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்குதல்.

மூத்த குடிமக்களுக்கான வாக்குறுதிகள்:

 • 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு.
 • தேசிய மூத்த குடிமக்கள் போர்ட்டல் மூலம் மூத்த குடிமக்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ள உதவுதல்.
 • மூத்த குடிமக்களுக்கு வீட்டு வாசலில் சமூக பாதுகாப்பு சலுகைகள் வழங்குதல் உடன், பிற சேவைகளுக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்தல்.
 • மூத்த குடிமக்களுக்கு உகந்த உள்கட்டமைப்பை உறுதி செய்தல்.
 • மூத்த குடிமக்கள் செல்லும் யாத்திரைகளை எளிதாக்குவது.

உள்கட்டமைப்புக்கான வாக்குறுதிகள்:

 • பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான திறனை அதிகரிக்க ரயில்வே நெட்வொர்க் விரிவாக்கம்.
 • கவாச் ரயில் பாதுகாப்பு அமைப்பு விரிவாக்கம்.
 • வந்தே ஸ்லீப்பர் ரயில்களை அதிகப்படுத்துதல்.
 • மெட்ரோ ரயில் நெட்வொர்க் விரிவாக்கம்.
 • கிராமப்புற சாலை இணைப்பு விரிவாக்கம்.
 • நெரிசலைக் குறைக்க முக்கிய நகரங்களைச் சுற்றி ரிங் ரோடுகள்.
 • மின்சார வாகனங்களை மேம்படுத்துதல், அதிக சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கம்.
 • வாட்டர் மெட்ரோ விரிவாக்கம் மற்றும் உள்நாட்டு கப்பல் துறையை உருவாக்குதல்

இளைஞர்களுக்கான வாக்குறுதிகள்:

 • போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிவதைத் தடுக்க புதிய சட்டம் அமல்.
 • வெளிப்படையான பொதுத் தேர்வு.
 • இளைஞர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்க ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு விரிவாக்கம்.
 • உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது.
 • உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம்.
 • சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு வழங்குதல்.

விவசாயிகளுக்கான வாக்குறுதிகள்:

 • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 தொடர்ந்து வழங்கப்படும்.
 • தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை வலுப்படுத்துவோம்.
 • பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சரியான நேரத்தில் உயர்த்துவது தொடரும்.
 • சத்தான காய்கறிகள் உற்பத்தியை ஊக்குவிப்பது, வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்ய தொகுப்புகளை அமைப்பது மற்றும் அதிக சேமிப்பு வசதிகளை உருவாக்குவது.
 • இயற்கை விவசாயம் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
 • விவசாய உள்கட்டமைப்பு, நீர்ப்பாசன வசதிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் செயற்கைக்கோள் ஏவுதல்.

தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகள்:

 • குறைந்தபட்ச ஊதியம் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை.
 • கிக் தொழிலாளர்கள் உட்பட அமைப்புசாரா துறையில் உள்ள உதவித் தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் போர்டல் விரிவாக்கம்.
 • பண்டிகை காலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் உறுதி செய்யப்படும்.
 • லாரி ஓட்டுநர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம்.
 • பிஎம் விஸ்வகர்மா யோஜனா திட்டம் விரிவாக்கம்.

இதுதவிர....:

 • ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக முயற்சி.
 • நாட்டின் எல்லைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு.
 • இந்தியாவின் இணையப் பாதுகாப்பை அதிகரிப்பது.
 • அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
 • சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம்.
 • மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம்.
 • நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம்.
 • இந்தியாவை மூன்றாவது பொருளாதாரமாக உயர்த்துவது.
 • அனைத்து நாடுகளிலும் பகவான் ராமரின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகளாவிய ரீதியில் ஒரு திட்டம் தொடக்கம்.
 • அயோத்தியின் முழுமையான வளர்ச்சிக்கு உத்தரவாதம்.
 • மத மற்றும் கலாச்சார தளங்களை மேம்படுத்துதல்.
 • இந்திய திருமணங்களின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘வெட் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவரப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x