

புதுடெல்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும், இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்:
தமிழுக்கு முக்கியத்துவம்: "உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் நிறுவப்படும்" என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், “இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக, பயிற்சி அளிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை நிறுவுவோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் வளமான ஜனநாயக மரபுகளை ஜனநாயகத்தின் தாயாக நினைத்து மேம்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தனது தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகள் ஜூன் 4 முதலே தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.