Published : 12 Apr 2024 05:13 AM
Last Updated : 12 Apr 2024 05:13 AM

உடல்நலம் குன்றிய முன்னாள் கணவருக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: உடல்நிலை பாதிக்கப்பட்ட முன்னாள் கணவருக்கு மனைவி மாதம் ரூ.10 ஆயிரம் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்கும்படி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக 2020-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக கணவனிடம் இருந்து மனைவி ஒருவர் விவாகரத்து பெற்றார். இந்நிலையில், தான் நோயுற்றதால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும்,வங்கி மேலாளராக பணிபுரிந்து வரும் மனைவி தனக்கு இடைக்கால பராமரிப்பு தொகை வழங்கும்படியும் கணவர் முறையிட்டார்.

ஆனால், தான் வீட்டுக்கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்திலும், மைனர் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பிலும் இருப்பதால் தன்னால் கணவருக்கு பராமரிப்பு தொகை அளிக்க முடியாது என்றார் மனைவி. இந்த வழக்கை 2020-ம்ஆண்டில் விசாரித்த மும்பை நகர சிவில் நீதிமன்றம் நோயுற்ற கணவருக்கு மனைவி பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஷர்மிளா தேஷ்முக் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

இந்து திருமணச் சட்டப்படி ‘இணையர்’ என்ற சொல் கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது. ஆகையால் தங்களை சுயமாக பராமரித்துக் கொள்ளும் நிலையில் கணவன் அல்லது மனைவி இல்லாத பட்சத்தில் இணையரில் ஒருவர் மற்றொருவருக்குப் பராமரிப்புத் தொகை வழங்கிட வேண்டும்.

இந்த வழக்கில், உடல் உபாதை காரணமாக தனக்கென வருமானம் ஏதும் இல்லாததால் கணவரால் தன்னை பராமரித்துக் கொள்ள முடியவில்லை. அவரது மனைவிக்கு வருமானம் வருவதால் அவர் முன்னாள் கணவருக்கு இடைக்கால ஜீவனாம்வசமாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். கணவருக்கு இடைக்கால பராமரிப்புத் தொகை வழங்குவதற்கு எதிரான மனைவியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x