Last Updated : 07 Apr, 2024 12:13 PM

 

Published : 07 Apr 2024 12:13 PM
Last Updated : 07 Apr 2024 12:13 PM

ரயிலில் மீண்டும் மூத்தகுடிகளுக்கு சலுகை: காங்கிரஸ் வாக்குறுதியும் பின்புலமும்

புதுடெல்லி: ண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரயிலில் மீண்டும் மூத்தகுடிகளுக்கு சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. கடந்த பல வருடங்களாக ரயிலில் மூத்தகுடிகளுக்கு கட்டணங்களில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. கரோனா பரவலை காரணமாக்கி பாஜக தலைமையிலான அரசு அதை ரத்து செய்தது.

நாடு முழுவதிலும் ஓடும் ரயில்களில் ஆண்டுதோறும் சுமார் 800 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். இவர்களில், ஆண், பெண் என மூத்தகுடிமக்களில் இருபாலர்களுக்குமான ரயில் கட்டண சலுகை கடந்த மார்ச் 20, 2020 முதல் ரத்தானது.

கரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்பும் மூத்தகுடிகள் சலுகை இன்னும் அளிக்கப்படவில்லை. இதை தமது தலைமையிலான அரசு மக்களவைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இருதினங்களுக்கு முன்னர் அகில இந்தியக் காங்கிரஸ் வெளியிட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பலன் பெறும் பல கோடி மூத்தகுடிகளின் வாக்குகளை குறிவைத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் நிர்வாகத்திலுள்ள ரயில்களில் மொத்தம் 54 வகையினருக்கான சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றில் பிரதமர்-குடியரசு தலைவர் விருதுகள் பெறுபவர்கள், மூத்தகுடிகள், விளையாட்டு வீரர்கள், விதவைகள், மாணவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்கள், காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் என இப்பட்டியல் நீள்கிறது. இவற்றில் சிலவற்றை தவிர இன்னும் மூத்தகுடிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கான பல சலுகைகள் தொடரப்படவில்லை. இந்த சலுகைகளின் மீது நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஆலோசனை செய்து அறிக்கை அளித்திருந்தது.

பாஜக எம்பி ராதா மோகன்சிங் தலைமையிலான இக்குழு, மூத்தகுடிகளுக்கு மீண்டும் சலுகை வழங்க அரசுக்கு ஆலோசனை வழங்கியது. மார்ச் 2023-ல் வழங்கப்பட்டதில் உடனடியாக அமலாக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்குமுன், வழங்கப்பட்ட அனைத்துவகை சலுகைகளினால் ஆண்டுதோறும் சுமார் ரூ.1,800 கோடி அரசுக்கு செலவாகிறது. இவற்றை அளித்தால் ரூ.100 மதிப்புள்ள பயணச்சீட்டில் கட்டணத்தில் ரூ.53 சலுகையாகிவிடும் என காரணம் கூறி மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x