Published : 06 Apr 2024 07:56 PM
Last Updated : 06 Apr 2024 07:56 PM

“தேர்தல் நியாயமற்ற முறையில் இருந்தாலும் இண்டியா கூட்டணி தனிப் பெரும்பான்மை பெறும்” - காங்.

புதுடெல்லி: “எதிர்க்கட்சிகள் குறிவைக்கப்பட்டு மக்களவைத் தேர்தல் நியாயமற்ற முறையில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் 5 நியாயங்கள், 25 வாக்குறுதிகளுக்கான மக்களின் பதிலால் இண்டியா கூட்டணி தனிப் பெரும்பான்மை பெறும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதால் இந்தத் தேர்தல் நியாயமானதாக இல்லை என்றாலும், மக்களின் தேவையை பிரதிபலிக்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 5 நியாயங்கள், 25 வாக்குறுதிகளுக்கான மக்களின் எதிர்வினையாக இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணி தனிப் பெரும்பான்மையைப் பெறும்.

தேர்தலை நியாமற்றதாகவும், சுதந்திரமற்றதாகவும் மாற்ற பிரதமர் மோடி எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நாட்டு மக்கள் தீர்மானமாக நிராகரிப்பார்கள். பத்து ஆண்டு கால அநியாயங்கள் அதற்கு அடித்தளமாக உள்ளது" என்றார்.

மேலும், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் எதிரிகளின் எல்லைக்குள் அழிக்கும் புதிய இந்தியா என்ற கருத்தை விமர்சித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், “இது, காங்கிரஸின் 5 நியாயங்கள், 25 வாக்குறுதிகள் பற்றி மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்தி” என்று விமர்சித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷின் இந்தக் கருத்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்ட மறுநாள் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 'நியாய பத்திரம்' என்ற பெயரில் 5 நியாயங்கள் மற்றும் 25 வாக்குறுதிகளை முன்னிறுத்தி தனது அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதில், சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும். எம்எஸ்பி உத்திரவாத சட்டம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x