Published : 03 Apr 2024 08:54 AM
Last Updated : 03 Apr 2024 08:54 AM

ராகுல் காந்தியின் கருத்து ஜனநாயகத்தின் மொழியா? - பிரதமர் மோடி விமர்சனம்

உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மூன்றாவது முறையாக பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் உத்தராகண்ட் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசியதாவது:

மக்கள் மூன்றாவது முறையாக பாஜகவை தேர்ந்தெடுத்தால் நாடு தீப்பற்றி எரியும் என்ற பட்டத்து இளவரசர் ராகுலின் கருத்து ஜனநாயக மொழியில் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நீங்கள் இதை ஆமோதிக்கிறீர்களா? நாட்டை தீக்கிரையாக்க அனுமதிப்பீர்களா? இப்படி சொல்பவர்களை தண்டிக்க மாட்டீர்களா?.

ஜனநாயகத்தில் காங்கிரஸையும் அதன் எமர்ஜென்சி மனப்பான்மையையும் யாரும் நம்புவதில்லை. அதனால் தற்போது அவர்கள் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தியாவை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதே காங்கிரஸின் விருப்பம்.

சிஏஏ சட்டத்தை காங்கிரஸ் எவ்வளவு எதிர்த்தாலும் அகதிகளுக்கான மோடியின் உத்தரவாதம் தொடரும். குருநானக் குருத்வாராவுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை பாஜக கொண்டு வந்தது. காங்கிரஸ் பலவீனத்தை காட்டாமல் இருந்திருந்தால் நமது எல்லையை யாரும் ஏறெடுத்து பார்க்கக்கூட துணிந்திருக்கமாட்டார்கள். கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்தது மற்றொரு புது உதாரணமாக தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த காங்கிரஸ் கட்சியால் நாட்டை காக்க முடியுமா? இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x