Last Updated : 03 Feb, 2018 05:47 PM

 

Published : 03 Feb 2018 05:47 PM
Last Updated : 03 Feb 2018 05:47 PM

காங்கிரஸ், பா.ஜ.கட்சிகள் வழக்கில் இருந்து தப்பிவிட்டன: சீதாராம் யெச்சூரி காட்டம்

அன்னிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டன. இரு கட்சிகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஏராளமான நன்கொடைகள் பெற்றுள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும், அதற்கு மேல் நன்கொடைகளை தேர்தல் நிதிபத்திரங்கள் மூலமே வழங்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் குறிப்பிட்ட வங்கிகளில், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தவர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடையை அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஏராளமாக நன்கொடை பெறுகின்றன. இந்த இரு கட்சிகளும் அன்னிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வராமல் இருந்து இருந்தால், இரு கட்சிகளும் வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டு இருக்கும். அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் இரு கட்சிகளும் தங்களை பாதுகாத்துக்கொண்டன.

ஆளும் பாஜக அரசு, நிதிச்சட்டம் 2017 ன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, வருமான வரிச் சட்டம் 1961, கம்பெனிச் சட்டம் 2013 ஆகியவற்றில் திருத்தம் செய்து, தேர்தல் நிதிப்பத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் கடந்த மாதம் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டன.

காங்கிரஸ், பாஜக கட்சிகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்றார்போல் கொள்கைகளை வடிவமைத்துக்கொள்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு கார்பரேட் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடை செய்யப்பட வேண்டும்.

கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதிபெறும் அரசியல் கட்சிகள், அவர்களுக்கு ஏற்றார்போல் நட்புறவோடு இருக்க கொள்கைகளை உருவாக்குகிறார்கள்.

இந்த கார்பரேட் நிறுவனங்கள்தான் ஊழிலின் ஊற்றுக்கண், நம்முடைய முறையையே அழிக்கிறார்கள். கார்ப்பரேட் நன்கொடையை தடை செய்யாதவரை ஊழல் பிரச்சினையை தீர்க்க முடியாது.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ், பாஜகவுக்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமாக நிதி உதவி அளித்துள்ளன.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x