Last Updated : 03 Feb, 2018 05:00 PM

 

Published : 03 Feb 2018 05:00 PM
Last Updated : 03 Feb 2018 05:00 PM

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, வங்கியில் ரூ.15 லட்சம் மற்றும் இதற்கும் மேலான தொகையை டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு வருகிறது வருமான வரித் துறை..

நாட்டில் கறுப்புபணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் வகையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம்தேதி இரவு அறிவித்தார்.

அந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் வங்கிகளில் ஏராளமானோர், ரூ. 15 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமாக டெபாசிட் செய்துள்ளனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

இது குறித்து மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.15 லட்சத்துக்கு அதிகமான தொகையை வங்கியில் டெபாசிட் செய்ததாக 1.98 லட்சம் கணக்குகளை கண்டுபிடித்துள்ளோம்.

அவர்களிடம் விளக்கம் கேட்டு கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அவ்வாறு பதில் அளிக்காமல் இருக்கும் நபர்கள் மீது வருமான வரித் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

மேலும், கடந்த 3 மாதங்களில், பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு, தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்தது உள்ளிட்ட தவறுகளைச் செய்த 3 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.

அதேசமயம், வருமான வரித் துறையில் டிஜிட்டல்மயத்தை புகுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். மேலும், புதிதாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களுக்காக இணையதளம் மூலம் தாக்கல் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தினோம். அதில் இதுவரை 60 ஆயிரம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x