Last Updated : 17 Feb, 2018 04:13 PM

 

Published : 17 Feb 2018 04:13 PM
Last Updated : 17 Feb 2018 04:13 PM

இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து கொண்டாடும் உ.பி. கிராம கோயில் திருவிழா

ராம்பூரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள சிவன் கோயிலில் முஸ்லிம்களும் இந்துக்களும் இணைந்து திருவிழா கொண்டாடுகின்றனர். 18ஆம் நூற்றாண்டில் ஒரு முஸ்லிம் நவாப் இக்கோயிலுக்கான நிலத்தை வழங்கினார்.

பாம்ரவா கிராமத்தில் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 75 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இக்கோயில் கட்டப்படுவதற்கான நிலத்தை நவாப் ஹமீத் அலி கான் வழங்கிட 1788-ல் இக்கோயில் கட்டப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் நூற்றாண்டுகள் பழமைமிக்க ராம்பூர் ராஸா நூலகத்தில் ஆவணங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இரு சமூகங்களும் இப்பகுதியில் மிகச் சிறந்த இணக்கமான உறவைப் பேணி வருகின்றனர்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இனவாத பதட்டங்கள் பதிவாகிவரும் சூழலில், இக்கிராமத்தில் நிலவும் சமாதானம் பற்றி காவல் கண்காணிப்பாளர் விபின் தாடா தெரிவிக்கையில், ''உத்தரப் பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாகத் திகழும் சிற்சில இடங்கில் பாம்ரவாவும் ஒன்று. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இங்குள்ள சிவன் கோயிலை பாதுகாத்து வருவதே முஸ்லிம்கள்தான். இவர்கள் இக்கோயில் திருவிழக்களின் சமயச் சடங்குகளில் பங்கேற்கின்றனர். இன்னொரு ஆச்சரியம் இக்கோயில் நேர்எதிரே முஸ்லிம்கள் தொழும் மசூதி உள்ளது'' என்றார்.

இக்கிராமவாசி மோஷின் மியான் என்பவரிடம், இந்தக் கோயிலில் ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிக்கிறதே இதில் உங்களுக்கு எதுவும் பிரச்சனையில்லையா என்று கேட்டபோது, ''நிச்சயம் இல்லை. ஏனெனில் எங்கள் தொழுகை ஆரம்பிக்கும் முன்பாகவே ஒலிப்பெருக்கியில் முழங்கும் பாடல்களை இவர்கள் நிறுத்திவிடுவர்'' என்றார்.

இக்கிராமத் தலைவியின் கணவர் மொஹ்மது அஸ்லாம் கூறுகையில்,இக்கிராமத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இக்கோயிலுக்கு பாதுகாப்பை வழங்குகிறார்கள். முக்கியமாக நாட்டில் எங்கு இனவாதப் பிரச்சினைகள், மோதல்கள் வெடித்தாலும் முதல்வேளையாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இக்கோயிலை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படுவார்கள்.

இக்கோயிலில் ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்களின்  வழிபாட்டின்போது நடைபெறும் பாதரா விருந்தில் அவர்களுக்கு உதவியாக நாங்களும் ஒத்துழைப்பதோடு நாங்கள் அவ்விருந்தில் கலந்துகொள்வோம்'' என்றார்.

இந்துக்கோயிலை பாதுகாக்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களின் தொழுகை இடையூறின்றி நடத்த உதவும் இந்துக்கள் என நல்ல மனிதர்களின் விளைநிலமாய் திகழ்கிறது உ.பி.யின் பாம்ராவ் கிராமம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x