Published : 19 Mar 2024 08:28 AM
Last Updated : 19 Mar 2024 08:28 AM

காங். பிரமுகர் சையது ஜாபர் பாஜகவில் இணைந்தார்

புதுடெல்லி: மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கமல்நாத்தின் நெருங்கிய நண்பரான சையது ஜாபர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் நேற்று இணைந்தார்.

முன்னதாக, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தவர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகப் பதவி வகித்த சையது ஜாபர். அதிலும் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டங்கள் அனைத்திலும் இவர் உடன் இருந்தார். ஆனால், அந்த தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இந்நிலையில், கடந்தஇரண்டு வாரங்களாகத் தனதுநிலைப்பாட்டில் சில தடுமாற்றங்களை சையது ஜாபர் வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாகக் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு முழு வரவேற்பு அளித்தார்.

அதையடுத்து போபாலில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்த சையது ஜாபர்முதல்வர் மோகன் யாதவ், மாநில பாஜக தலைவர் வி.டி.ஷர்மா உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

ஏற்கெனவே கமல்நாத் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாக ஊகங்கள் கடந்த மாதம் வேகமாக பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, போபாலில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கமல்நாத் தான் பாஜகவில் இணையப்போவதில்லை என்று பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x