Published : 18 Mar 2024 07:30 AM
Last Updated : 18 Mar 2024 07:30 AM
கொல்கத்தா: பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) முஸ்லிம்கள் உட்பட யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி, நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர்.
ஒரு காலத்தில் பிரதமர் மோடி மீது அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டில் அவர் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை மக்கள் உணர்ந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக அவர் நல்லாட்சி நடத்தி வருகிறார். இதை முஸ்லிம்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆட்சிகளைவிட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் சமூக நல்லிணக்கம் மேம்பட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி ஆட்சி காலங்களைவிட பிரதமர் மோடியின் ஆட்சியில் மதச்சார்பின்மை போற்றி காப்பாற்றப்படுகிறது.
இந்தியாவில் ஊழல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய அத்தியாயத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அவரது ஆட்சியால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறை மத்தியில் ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகள் மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்துவிட்டனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை மக்கள் நம்பவில்லை.
இண்டியா கூட்டணிக்கு வலுவான தலைமை இல்லை. தெளிவான கொள்கை, கோட்பாடுகள் இல்லை. அந்த கூட்டணியில் குழப்பங்கள் மட்டுமே நிறைந்துள்ளன. இண்டியா கூட்டணியால் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அந்த கூட்டணியின் கட்சிகளுக்குள் குழப்பம், கருத்து வேறுபாடுகள் எழுந்து மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுத்து உள்ளன. அவர்களுக்கு அவர்களே எதிரிகளாக உள்ளனர்.
இண்டியா கூட்டணி தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமராகும் ஆசை இருக்கிறது. அந்தகூட்டணியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ராகுல் காந்தியே முக்கியகாரணமாக உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை சந்திப்போம் என்பதை இண்டியா கூட்டணி தலைவர்கள் இப்போதே உணர்ந்துவிட்டனர். இதன் காரணமாக அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன.
வாரிசு அரசியலை மட்டுமே காங்கிரஸ் முன்னிறுத்துகிறது. முன்னாள் பிரதமர்கள் சந்திர சேகர், சவுத்ரி சரண் சிங், எச்.டி. தேவ கவுடா அரசுகளை காங்கிரஸ் கட்சியே கவிழ்த்தது. காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் ஆட்சி மத்தியில் பதவியேற்பதை மக்கள் துளியும் விரும்பவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு முன்பாக இண்டியா கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்க நேரிடும். கருத்துக் கணிப்புகளின் மூலம் பாஜகவின் நல்லாட்சியை மக்கள் விரும்புவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT