Published : 03 Feb 2018 09:13 AM
Last Updated : 03 Feb 2018 09:13 AM

12 ஆண்டுகளுக்குப் பிறகு போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த 1986-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் கடந்த 2005-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு அண்மையில் ஆய்வு செய்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனது கருத்தை மத்திய அரசிடம் அண்மையில் தெரிவித்தார். “வழக்கு முடிந்து 12 ஆண்டுகளாகிவிட்டதால் மேல்முறையீடு செய்தால் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகிவிடும்” என்று அவர் கூறினார்.

இந்தப் பின்னணியில், போபர்ஸ் வழக்கில் கடந்த 2005-ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. வலுவான ஆதாரங்கள் இருப்பதால் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போபர்ஸ் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் அஜய் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்தார். இந்த மனு கடந்த செப்டம்பரில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிபிஐ அமைப்பும் போபர்ஸ் வழக்கில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x