Last Updated : 04 Feb, 2018 09:20 AM

 

Published : 04 Feb 2018 09:20 AM
Last Updated : 04 Feb 2018 09:20 AM

முத்தலாக் நடைமுறையை தடுக்க நிக்காஹ்நாமாவில் மாற்றம்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் யோசனை

உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட முத்தலாக் முறையை தடுக்க அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் ஒரு புதிய யோசனை செய்து வருகிறது. இதன்படி, மணமான பின் கணவர் முத்தலாக் அளிக்காதபடி ‘நிக்காஹ்நாமா’ எனும் திருமண சாசனத்தில் மாற்றம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் கூறி அளிக்கப்படும் விவாகரத்திற்கு முத்தலாக் முறை எனப் பெயர். இதன் மீது கடந்த ஆகஸ்ட்டில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, சுதந்திர இந்தியாவில் ஒரு வரலாற்று மைல்கல் எனக் கருதப்படுகிறது. அதில் 1400 வருடங்களாக முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தி வந்த முத்தலாக் முறை சட்டவிரோதம் எனக் கூறி தடை விதிக்கப்பட்டது. இதை தீவிரமாக அமலாக்க வேண்டி, முத்தலாக் கூறி விவாகரத்து செய்வோருக்கு ஜாமீன் கிடைக்காத 3 வருட சிறைத் தண்டனை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. முத்தலாக் முறை தவறானது என ஒப்புக்கொண்டாலும் அதை தடுக்கும் சட்டத்திற்கு தொடர்ந்து முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் உட்பட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், முஸ்லிம்களின் திருமணத்தில் இயற்றப்படும் நிக்காஹ்நாமாவில் மாற்றம் செய்ய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் புதிய யோசனை செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் மவுலானா கலீல் உல் ரஹ்மான் சஜாத் நொமானி கூறும்போது, “திருமண சாசனத்தின் நிபந்தனைகளில் கையெழுத்து இட்டவர்கள் அதை மீற முடியாது. எனவே, அதன் நிபந்தனைகளில் ஒன்றாக ‘எனது மனைவியை ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்ய மாட்டேன்’ என சேர்க்க உள்ளோம். இதன் மீது விரிவாக ஆலோசித்து வரும் 9-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் எங்கள் பொதுக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுப்போம்” என்றார்.

ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் மூன்று நாள் கூட்டத்தில் முத்தலாக் மீது மத்திய அரசு கொண்டுவர இருக்கும் சட்டம் உட்பட முஸ்லிம் சமூகப் பிரச்சினைகள் குறித்தும், விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் அயோத்தி பாபர் மசூதி-ராமர் கோயில் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகளை படிப்பறிவில்லாத மற்றும் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்கள் இடையே தீவிரமான விழிப்புணர்வு ஏற்படுத்த தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக அப்பகுதி முஸ்லிம்கள் மற்றும் மதரசாக்களில் பயின்ற மவுலானாக்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் 28-ல் நாடாளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2017’ என்ற மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி அதேநாளில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் ஆளும் கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லாததால் அந்த மசோதா நிலுவையில் உள்ளது. தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, அதிமுக, அகில இந்திய முஸ்லிம் லீக், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாதுல் முஸ்லீமின் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x